கனடாவில் பனிச்சரிவு விபத்து; சுவிட்சர்லாந்தைச் சேர்ந்த மூவர் உயிரிழப்பு கனடாவின் British Columbia மாகாணத்தில் உள்ள Mount Knauss பகுதியில் கடந்த ஞாயிற்றுக்கிழமை நிகழ்ந்த பனிச்சரிவு விபத்தில், சுவிட்சர்லாந்தைச் சேர்ந்த மூவர் உயிரிழந்துள்ளனர். இந்த சம்பவம் குளிர்கால விளையாட்டுகளில் ஒன்றான ஹெலி-ஸ்கீயிங் (Heliskiing) மேற்கொண்டிருந்தபோது ஏற்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது. ஹெலிகாப்டர் மூலம் மலை உச்சிக்குச் சென்று பனிச்சறுக்கு விளையாட்டில் ஈடுபட்டிருந்த இந்தக் குழுவினர் மீது திடீரென பனிச்சரிவு ஏற்பட்டுள்ளது. உயிரிழந்தவர்கள் கிழக்கு சுவிட்சர்லாந்தைச் சேர்ந்த தொழிலதிபர் ஒருவரும், அவரது இரண்டு மகன்களும் என தகவல்கள் வெளியாகியுள்ளன. அவர்களுடன் சென்ற வழிகாட்டி ஒருவர் பனிச்சரிவில் சிக்கி கடுமையாக காயமடைந்த நிலையில், ஹெலிகாப்டர் மூலம் மீட்கப்பட்டு Vancouver நகரிலுள்ள மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். கடந்த சில நாட்களாக அந்தப் பகுதியில் கடுமையான பனிப்பொழிவும் மழையும் பெய்திருந்ததால், பனிச்சரிவு அபாயம் அதிகரித்திருந்ததாக கனடா அதிகாரிகள் முன்னரே எச்சரித்திருந்தனர். இந்த நிலையில், பனிச்சறுக்கு நடவடிக்கையின் போது ஏற்பட்ட அதிர்வுகளே இந்தப் பனிச்சரிவைத் தூண்டியிருக்கலாம் என முதற்கட்ட விசாரணைகள் சுட்டிக்காட்டுகின்றன. இந்தச் சம்பவத்தை Swiss Federal Department of Foreign Affairs உறுதிப்படுத்தியுள்ளது. Vancouver நகரில் உள்ள சுவிஸ் தூதரகம் கனடா அதிகாரிகளுடன் இணைந்து செயல்பட்டு வருவதுடன், உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு தேவையான தூதரக உதவிகள் வழங்கப்பட்டு வருகின்றன. உயிரிழந்தவர்களின் அடையாள விவரங்கள் அவர்களது தனியுரிமையை கருத்தில் கொண்டு வெளியிடப்படவில்லை. இதேவேளை, இந்த விபத்துக்குப் பிறகு சம்பந்தப்பட்ட ஹெலி-ஸ்கீயிங் நிறுவனம் தனது சேவைகளை தற்காலிகமாக நிறுத்தி வைத்துள்ளதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன. ¢krone