பார்க்கிங் அபராத மோசடி: ஜெனீவா–பாரிஸ் போலீசார் மேலும் 9 பேரை கைது சுவிட்சர்லாந்தின் Geneva மற்றும் Paris நகர போலீசார் இணைந்து நடத்திய விசாரணையில், பார்க்கிங் அபராதம் தொடர்பான பெரிய அளவிலான மோசடி வழக்கில் மேலும் ஒன்பது பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். இந்த மோசடி பிரெஞ்சு மொழி பேசும் சுவிட்சர்லாந்து முழுவதும் பலரை பாதித்திருந்தது. ஏற்கனவே கடந்த செப்டம்பர் மாதத்தில் மூவர் கைது செய்யப்பட்ட நிலையில், தொடர்ச்சியான விசாரணையின் மூலம் தற்போது மேலும் பலர் பிடிபட்டுள்ளனர். இந்த மோசடி குழு மிகவும் தொழில்நுட்ப ரீதியான முறையை பயன்படுத்தியுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். ‘SMS blaster’ எனப்படும் சாதனங்களை கார்களில் நிறுவி, அருகில் உள்ள மொபைல் தொலைபேசிகளின் சிக்னல்களை தற்காலிகமாக கைப்பற்றி, போலியான குறுந்தகவல்கள் அனுப்பப்பட்டுள்ளன. அந்த தகவல்கள் பார்க்கிங் அபராதம் செலுத்த வேண்டுமென கூறி, அதிகாரப்பூர்வமாக தோன்றும் இணையதள இணைப்புகளுடன் அனுப்பப்பட்டன. அந்த QR குறியீடுகளை ஸ்கேன் செய்தவர்கள் போலியான இணையதளத்திற்கு மாற்றப்பட்டு, CHF 40 அபராதம் செலுத்தும்படி ஏமாற்றப்பட்டுள்ளனர். இந்த முறையின் மூலம் குற்றவாளிகள் 2 மில்லியன் சுவிஸ் பிராங்குக்கு மேல் மோசடி செய்திருக்கலாம் என அதிகாரிகள் சந்தேகிக்கின்றனர். சமீப காலங்களில் சுவிட்சர்லாந்தில் டிஜிட்டல் மோசடிகள் அதிகரித்து வரும் நிலையில், அதிகாரப்பூர்வ அமைப்புகளின் பெயரில் வரும் குறுந்தகவல்கள் மற்றும் இணைப்புகளை மக்கள் கவனமாக சரிபார்க்க வேண்டும் என போலீசார் எச்சரித்துள்ளனர். WRS