சுவிட்சர்லாந்தில் குற்றங்கள் குறைந்தாலும் வன்முறை சம்பவங்கள் உயர்வு சுவிட்சர்லாந்தில் கடந்த சில ஆண்டுகளுடன் ஒப்பிடுகையில் மொத்த குற்றங்களின் எண்ணிக்கை குறைந்துள்ளதாக சமீபத்திய தரவுகள் காட்டுகின்றன. குறிப்பாக, சுவிட்சர்லாந்து மத்திய புள்ளிவிவர அலுவலகம் (BFS) வெளியிட்ட அறிக்கையில், 2025 ஆம் ஆண்டில் குற்றச்செயல்கள் கணிசமாக குறைந்துள்ளதாக இந்தக் கணக்கில் தெரியவந்துள்ளது. 2009 ஆம் ஆண்டு முதல் அறிமுகப்படுத்தப்பட்ட குற்றப் பதிவு முறைமைக்கு பின்னர், அந்த ஆண்டில் 1,000 பேருக்கு 72 குற்றங்கள் பதிவான நிலையில், 2025 ஆம் ஆண்டில் அது 61 ஆக குறைந்துள்ளது. இது நீண்டகால அளவில் சுவிட்சர்லாந்தில் பாதுகாப்பு நிலை மேம்பட்டிருப்பதைக் காட்டுகிறது. சொத்து தொடர்பான குற்றங்களில் திருட்டு சம்பவங்கள் தொடர்ந்து முதன்மை இடத்தைப் பிடித்துள்ளன. 2025 ஆம் ஆண்டில் மொத்தம் 1,54,041 சொத்து குற்றங்கள் பதிவாகியுள்ளன. எனினும், 2024 ஆம் ஆண்டுடன் ஒப்பிடுகையில், இந்தப் பிரிவில் 5.3 சதவீதம் குறைவு பதிவாகியுள்ளது. அதேபோல், டிஜிட்டல் அல்லது சைபர் குற்றங்களும் சுமார் 2 சதவீதம் குறைந்துள்ளன. இவற்றில் பெரும்பாலானவை பண மோசடி தொடர்பானவை என அதிகாரிகள் குறிப்பிட்டுள்ளனர். ஆன்லைன் பரிவர்த்தனைகள் அதிகரித்துள்ள நிலையில், இத்தகைய குற்றங்கள் குறித்து மக்கள் எச்சரிக்கையாக இருக்க வேண்டும் என்றும் வலியுறுத்தப்பட்டுள்ளது. ஆனால், மொத்த குற்றங்கள் குறைந்திருந்தாலும், வன்முறை சம்பவங்களில் உயர்வு கவலை அளிக்கும் வகையில் உள்ளது. 2025 ஆம் ஆண்டில் மொத்தம் 49,915 வன்முறை குற்றங்கள் பதிவாகியுள்ளன, இது கடந்த ஆண்டை விட 2 சதவீதம் அதிகமாகும். இதில் கடுமையான வன்முறை குற்றங்கள் 8.1 சதவீதம் வரை உயர்ந்துள்ளன. மேலும், இந்த ஆண்டு இதுவரை சுமார் 92,000 பேருக்கு எதிராக குற்றவியல் சட்டத்தை மீறியதற்காக வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. பாதுகாப்பு நிலை மொத்தத்தில் மேம்பட்டிருந்தாலும், வன்முறை குற்றங்களின் அதிகரிப்பு குறித்து சட்ட அமலாக்க அமைப்புகள் தொடர்ந்து கவனம் செலுத்தி வருகின்றன. ©BFS