Interdiscount பெயரில் புதிய இணைய மோசடி: சலுகை மூலம் வங்கி தகவல் திருடும் கும்பல்
Interdiscount பெயரில் புதிய இணைய மோசடி: சலுகை மூலம் வங்கி தகவல் திருடும் கும்பல்

Interdiscount பெயரில் புதிய இணைய மோசடி: சலுகை மூலம் வங்கி தகவல் திருடும் கும்பல்
சுவிட்சர்லாந்தில் பிரபல மின்சாதன விற்பனை நிறுவனமான Interdiscount பெயரை பயன்படுத்தி புதிய இணைய மோசடி ஒன்று பரவி வருவதாக Cybercrimepolice.ch எச்சரிக்கை விடுத்துள்ளது. மிகவும் குறைந்த விலையில் மின்சாதனங்கள் வழங்கப்படுகின்றன என்ற பெயரில் பொதுமக்களின் வங்கி மற்றும் கிரெடிட் கார்டு தகவல்களை திருட முயற்சிகள் இடம்பெற்று வருகின்றன.
மோசடிக்காரர்கள் அனுப்பும் போலி மின்னஞ்சலில், “சர்வதேச மோதல்களின் காரணமாக Interdiscount தனது வணிகத்தை நிரந்தரமாக மூடுகிறது” என்று தெரிவிக்கப்படுகிறது. இதனால், குறுகிய காலத்திற்கு மட்டுமே விசேட தள்ளுபடி விலையில் பொருட்கள் விற்பனை செய்யப்படுகின்றன என கூறப்படுகிறது.
அந்த மின்னஞ்சலில் உள்ள இணைப்பை அழுத்தும் போது, உண்மையான Interdiscount இணையதளத்தைப் போலவே தோற்றமளிக்கும் போலி இணையப்பக்கத்துக்கு பயனர்கள் அழைத்துச் செல்லப்படுகின்றனர். அங்கு முதலில் ஒரு குறுகிய கருத்துக்கணிப்பு நிரப்புமாறு கேட்கப்படுகிறது. பின்னர் “தனிப்பட்ட Bonus Code” வழங்கப்பட்டு, அதனை பயன்படுத்தி சிறப்பு சலுகையை பெறலாம் என தெரிவிக்கப்படுகிறது.

அதன்பிறகு, தொலைக்காட்சி, மடிக்கணினி, விளையாட்டு கன்சோல் மற்றும் ரோபோ வெக்கூம் கிளீனர் போன்ற விலையுயர்ந்த மின்சாதனங்கள் வெறும் CHF 2.95 க்கு வழங்கப்படுவதாக காட்டப்படுகிறது.
இறுதிக்கட்டத்தில், பெயர், முகவரி மற்றும் கட்டண விவரங்களை பதிவு செய்து CHF 2.95 “Reservation Fee” செலுத்துமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது. ஆனால், இதன் பின்னணியில் உள்ள சைபர் குற்றவாளிகள் கிரெடிட் கார்டிலிருந்து அதிக தொகையை பிடித்தம் செய்வதற்கும், பின்னர் தொடர்ந்து பணம் எடுப்பதற்கும் தேவையான தகவல்களை சேகரிக்க முயற்சிக்கின்றனர்.
இந்த வகையான மின்னஞ்சல்கள் கிடைத்தால் அவற்றை Cybercrimepolice.ch இணையதளத்திற்கு அனுப்புமாறும், பின்னர் அந்த மின்னஞ்சலை அழிக்கவோ அல்லது Spam கோப்புறைக்கு மாற்றவோ அதிகாரிகள் அறிவுறுத்தியுள்ளனர்.
மேலும், மின்னஞ்சல், SMS அல்லது சமூக ஊடகங்கள் மூலம் வரும் இணைப்புகளை நேரடியாக திறக்க வேண்டாம் என்றும், எந்த நிறுவனத்தின் பெயரிலும் வரும் சலுகைகள் குறித்து சந்தேகம் இருந்தால் நேரடியாக அந்த நிறுவனத்துடன் தொடர்புகொண்டு உறுதிப்படுத்திக்கொள்ள வேண்டும் என்றும் எச்சரிக்கப்பட்டுள்ளது.
ஏற்கனவே தனிப்பட்ட தகவல்கள் அல்லது வங்கி விவரங்கள் வழங்கப்பட்டிருந்தால், உடனடியாக வங்கி அல்லது நிதி நிறுவனத்தை தொடர்புகொண்டு சம்பந்தப்பட்ட கார்டுகளை முடக்க வேண்டும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. முகவரி விவரங்கள் பகிரப்பட்டிருந்தால், எதிர்காலத்தில் தங்களின் பெயரில் வரக்கூடிய சந்தேகமான ஆர்டர்கள் அல்லது பில்ல்கள் குறித்து கூடுதல் கவனத்துடன் இருக்குமாறும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.
மேலும், அருகிலுள்ள கன்டோனல் போலீஸ் நிலையத்தில் முன்பதிவு செய்து அதிகாரப்பூர்வ புகார் அளிக்குமாறும் Cybercrimepolice.ch கேட்டுக்கொண்டுள்ளது.





