ஜெனீவாவில் போலி தபால் அறிவிப்புகள்: QR கோடு மோசடிக்கு எதிராக எச்சரிக்கை
ஜெனீவாவில் போலி தபால் அறிவிப்புகள்: QR கோடு மோசடிக்கு எதிராக எச்சரிக்கை

ஜெனீவாவில் போலி தபால் அறிவிப்புகள்: QR கோடு மோசடிக்கு எதிராக எச்சரிக்கை
ஜெனீவா கன்டோனல் காவல் துறை (Police Cantonale de Genève) தற்போது சுவிட்சர்லாந்தில் பரவி வரும் புதிய வகை மோசடி குறித்து பொதுமக்களுக்கு அவசர எச்சரிக்கை விடுத்துள்ளது. குறிப்பாக, சுவிஸ் தபால் சேவையான Swiss Post பெயரில் போலியாக தயாரிக்கப்பட்ட அறிவிப்புகள் வீடுகளின் தபால் பெட்டிகளில் வைக்கப்பட்டு வருகின்றன.
இந்த ஆவணங்கள் மிகவும் நம்பகமான முறையில் வடிவமைக்கப்பட்டுள்ளதால், பலர் அதை உண்மையான சுவிஸ் தபால் அறிவிப்பாகவே தவறாக நினைக்கும் அபாயம் ஏற்பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
மோசடிக்காரர்கள், “கையொப்பம் இன்றி வழங்க முடியாத பதிவு செய்யப்பட்ட பார்சல் வந்துள்ளது” என்ற தகவலுடன் போலி பெறும் சீட்டுகளை பகிர்ந்து வருகின்றனர். அதில் கொடுக்கப்பட்டுள்ள QR கோடை ஸ்கேன் செய்து புதிய விநியோக தேதியை தேர்வு செய்யுமாறு பெறுநர்களிடம் கேட்டுக்கொள்ளப்படுகிறது.
QR கோடை ஸ்கேன் செய்ததும், பாதிக்கப்பட்டவர்கள் சுவிஸ் தபால் அதிகாரப்பூர்வ இணையதளத்தைப் போலவே தோற்றமளிக்கும் ஒரு போலி இணையப்பக்கத்துக்கு அழைத்துச் செல்லப்படுகின்றனர். அங்கு விநியோக தேதியை தேர்வு செய்யவும், தனிப்பட்ட தகவல்களை பதிவு செய்யவும், மேலும் CHF 2.10 கட்டணம் செலுத்தவும் கேட்டுக்கொள்ளப்படுகிறது.

இந்த நடவடிக்கையின் பின்னணி நோக்கம், பொதுமக்களின் தனிப்பட்ட தகவல்கள் மற்றும் வங்கி அல்லது கார்டு கட்டண விவரங்களை திருடுவதே என ஜெனீவா கன்டோனல் காவல் துறை தெரிவித்துள்ளது.
சுவிட்சர்லாந்தில் அண்மைக் காலமாக QR கோடு மற்றும் போலி இணையதளங்களை பயன்படுத்திய இணைய மோசடிகள் அதிகரித்து வருவதால், அதிகாரிகள் மக்கள் மிகுந்த அவதானத்துடன் இருக்குமாறு கேட்டுக்கொண்டுள்ளனர். குறிப்பாக, தபால் சேவை, வங்கி அல்லது அரசு நிறுவனங்களின் பெயரில் வரும் எந்தவொரு அறிவிப்பையும் சரிபார்க்காமல் QR கோடுகளை ஸ்கேன் செய்ய வேண்டாம் என்றும் எச்சரிக்கப்பட்டுள்ளது.
சந்தேகத்திற்கிடமான அறிவிப்புகள் கிடைத்தால், நேரடியாக Swiss Post அதிகாரப்பூர்வ இணையதளம் அல்லது வாடிக்கையாளர் சேவையின் மூலம் உறுதிப்படுத்திக்கொள்ளுமாறும் காவல்துறை அறிவுறுத்தியுள்ளது. Kapo GE





