சுவிட்சர்லாந்திலும் குடும்ப மற்றும் பாலியல் வன்முறை அதிகரிப்பு
சுவிட்சர்லாந்திலும் குடும்ப மற்றும் பாலியல் வன்முறை அதிகரிப்பு

சுவிட்சர்லாந்திலும் குடும்ப மற்றும் பாலியல் வன்முறை அதிகரிப்பு: உதவி எண் 142 குறித்து பாசல் கன்டோனல் காவல் துறை விழிப்புணர்வு
வன்முறை என்பது எப்போதும் வெளிப்படையாக நடைபெறுவதில்லை. பல சந்தர்ப்பங்களில் அது அமைதியாகவும், பிறருக்குத் தெரியாத முறையிலும் நடைபெறுகிறது. குடும்ப வன்முறை, பாலியல் வன்முறை மற்றும் பாலின அடிப்படையிலான வன்முறைகள் சுவிட்சர்லாந்திலும் கவலைக்கிடமான அளவில் இடம்பெற்று வருகின்றன என பாசல்-ஷ்டாட் கன்டோனல் காவல் துறை எச்சரித்துள்ளது.
பலர் நினைப்பதை விட இந்த வகை வன்முறை சம்பவங்கள் அதிகமாக இடம்பெறுகின்றன என்றும், பல பாதிக்கப்பட்டவர்கள் அச்சம் அல்லது சமூக அழுத்தம் காரணமாக வெளியில் தெரிவிக்காமல் இருப்பதாகவும் அதிகாரிகள் குறிப்பிட்டுள்ளனர்.
இதையடுத்து, தேசிய அளவிலான பாதிக்கப்பட்டோருக்கான உதவி சேவை எண் 142 குறித்து பாசல்-ஷ்டாட் கன்டோனல் காவல் துறை பொதுமக்களின் கவனத்தை திருப்பியுள்ளது.
142 என்ற தொலைபேசி இலக்கம் முற்றிலும் இலவசமானது. மேலும், பெயர் வெளியிடப்படாமல் இரகசியமாக உதவி பெறும் வசதியும் இதில் வழங்கப்படுகிறது. இந்த சேவை 24 மணி நேரமும் செயல்பாட்டில் இருக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

தாங்களே வன்முறையால் பாதிக்கப்பட்டவர்களாக இருந்தாலும் அல்லது தங்களுக்குத் தெரிந்த ஒருவர் ஆபத்தில் இருக்கலாம் என்ற சந்தேகம் இருந்தாலும், உடனடியாக உதவி பெற முன்வர வேண்டும் என்றும், இதுபற்றி பேசத் தயங்க வேண்டாம் என்றும் காவல் துறை கேட்டுக்கொண்டுள்ளது.
சுவிட்சர்லாந்தில் குடும்ப மற்றும் பாலியல் வன்முறைகளை தடுக்கும் முயற்சியாக பல்வேறு அமைப்புகள் தொடர்ந்து விழிப்புணர்வு நடவடிக்கைகளை முன்னெடுத்து வருகின்றன. குறிப்பாக, மனஅழுத்தம், அச்சம் மற்றும் சமூக தனிமை காரணமாக பலர் அமைதியாகவே துன்பத்தை அனுபவிப்பதாக நிபுணர்கள் எச்சரிக்கின்றனர்.
baseljetzt





