சூரிக்கில் கோடிக்கணக்கான பணமோசடி சந்தேகம் – ஐந்து பேர் கைது

சூரிக்கில் கோடிக்கணக்கான பணமோசடி சந்தேகம் – ஐந்து பேர் கைது
சுவிட்சர்லாந்தின் Zurich கன்டோனில் சர்வதேச அளவில் செயல்பட்டு வந்த நிதிசேவை நிறுவனத்தின் நிர்வாகிகளை குறிவைத்து மேற்கொள்ளப்பட்ட பெரிய நடவடிக்கையில் ஐந்து பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
“சூரிக் கன்டோனல் காவல் துறை” மற்றும் “சூரிக் கன்டோனின் இரண்டாம் நிலை அரச வழக்குரைஞர் அலுவலகம்” இணைந்து மேற்கொண்ட தீவிர விசாரணைகளின் பின்னர், ஏப்ரல் 28ஆம் திகதி இந்த நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டது.
கைது செய்யப்பட்டவர்களுக்கு எதிராக, பல ஆண்டுகளாக குற்றச்செயல்களால் சம்பாதிக்கப்பட்ட கோடிக்கணக்கான பணத்தை வெளிநாடுகளுக்கு சட்டவிரோதமாக மாற்றியதாக குற்றச்சாட்டு முன்வைக்கப்பட்டுள்ளது.
விசாரணைகளின் படி, இந்த பணங்கள் முக்கியமாக மோசடி மற்றும் போதைப்பொருள் வர்த்தக நடவடிக்கைகளில் இருந்து கிடைத்தவை என தெரிவிக்கப்பட்டுள்ளது. கிரிப்டோ நாணயங்கள் மற்றும் போலி ஆவணங்களை பயன்படுத்தி பணப்பரிமாற்றங்கள் மறைக்கப்பட்டதாகவும் கூறப்படுகிறது.

இதன் மூலம் குற்றச்சாட்டுக்குள்ளானவர்கள் குழுவாகவும் தொழில்முறையிலும் பணமோசடி நடவடிக்கைகளில் ஈடுபட்டிருக்கலாம் என அதிகாரிகள் சந்தேகிக்கின்றனர்.
சுவிட்சர்லாந்தில் ஏழு இடங்களிலும் Germany நாட்டில் ஒரு இடத்திலும் வீட்டு சோதனைகள் நடத்தப்பட்டன. இந்த சோதனைகளில் முக்கிய ஆதாரங்களும் பெரியளவிலான சொத்துக்களும் பறிமுதல் செய்யப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த நடவடிக்கையில் 100க்கும் அதிகமான போலீசார் ஈடுபட்டிருந்தனர். தற்போது மூவர் தடுப்புக் காவலிலும், ஒருவர் நாடு கடத்தல் காவலிலும் உள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
இந்த வழக்கின் விசாரணைகள் தொடர்ந்து நடைபெற்று வருவதால், மேலதிக தகவல்கள் தற்போது வெளியிடப்படமாட்டாது என Zurich அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். © Kapo ZH





