சுவிட்சர்லாந்தில் ஆபத்தான பொருட்கள் மீளப்பெறுதல் எண்ணிக்கை சாதனை அளவில் உயர்வு

சுவிட்சர்லாந்தில் ஆபத்தான பொருட்கள் மீளப்பெறுதல் எண்ணிக்கை சாதனை அளவில் உயர்வு
சுவிட்சர்லாந்தில் தரக்குறைவு அல்லது ஆபத்தான பொருட்கள் சந்தையிலிருந்து மீளப்பெறப்படும் சம்பவங்கள் கடந்த சில ஆண்டுகளில் கணிசமாக அதிகரித்துள்ளதாக புதிய தகவல்கள் வெளியாகியுள்ளன.
“சுவிட்சர்லாந்து உணவு பாதுகாப்பு மற்றும் கால்நடை விவகாரங்களுக்கான மத்திய அலுவலகம் (BLV) வெளியிட்ட தகவலின்படி, 2022 முதல் 2025 வரை பொருட்கள் மீளப்பெறப்பட்ட எண்ணிக்கை 50 சதவீதம் உயர்ந்துள்ளது.
2026ஆம் ஆண்டின் முதல் மாதங்களிலேயே 90 பொருட்கள் சந்தையிலிருந்து திரும்ப பெறப்பட்டுள்ளன. இது கடந்த ஆண்டின் மொத்த எண்ணிக்கையின் பாதியளவாகும்.

மீளப்பெறப்பட்ட பொருட்களில் முறையாக sterilize செய்யப்படாத கண் ஜெல், பாக்டீரியா தொற்றுள்ள காளான் வகைகள் மற்றும் கைப்பிடி பலவீனமாக இருந்து தீவிர தீக்காய அபாயத்தை ஏற்படுத்தக்கூடிய மின்கெட்டில்கள் ஆகியவை இடம்பெற்றுள்ளன.
ஆன்லைன் கொள்முதல் அதிகரித்திருப்பதே இந்த உயர்விற்கான முக்கிய காரணமாக இருப்பதாக BLV தெரிவித்துள்ளது. குறிப்பாக இணையத்தின் மூலம் விற்கப்படும் சில பொருட்கள் தரமற்றவையாகவோ அல்லது நேரடியாக ஆபத்தை ஏற்படுத்தக்கூடியவையாகவோ இருப்பதாக அதிகாரிகள் எச்சரித்துள்ளனர்.
இதனால், நுகர்வோர் ஆன்லைன் மூலம் பொருட்கள் வாங்கும்போது பாதுகாப்பு தரநிலைகள் மற்றும் அதிகாரப்பூர்வ விற்பனையாளர்கள் குறித்து கவனம் செலுத்த வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.





