இரசாயன நிறுவனத்தில் வெடிப்பு… வீடுகளின் ஜன்னல்களை மூட உத்தரவு!
இரசாயன நிறுவனத்தில் வெடிப்பு... வீடுகளின் ஜன்னல்களை மூட உத்தரவு!

இரசாயன நிறுவனத்தில் வெடிப்பு… வீடுகளின் ஜன்னல்களை மூட உத்தரவு!
சுவிட்சர்லாந்தின் பெர்ன் மாகாணத்தில் உள்ள லாங்கெந்தால் பகுதியில் செவ்வாய்க்கிழமை மாலை ஒரு இரசாயன நிறுவன வளாகத்தில் ஏற்பட்ட பெரிய தீ விபத்து அப்பகுதி மக்களிடையே பெரும் பதற்றத்தை ஏற்படுத்தியுள்ளது.
தீ விபத்தையடுத்து கூட்டாட்சி எச்சரிக்கை அமைப்பான Alertswiss அடர்த்தியான கருப்பு புகை பரவி வருவதாக எச்சரிக்கை விடுத்தது. மக்கள் உடனடியாக வீடுகளின் ஜன்னல்கள் மற்றும் கதவுகளை மூடி வைக்கவும், காற்றோட்டம் மற்றும் குளிரூட்டும் சாதனங்களை அணைத்து வைக்கவும், சம்பவம் நடந்த பகுதியைத் தவிர்க்கவும் அறிவுறுத்தப்பட்டனர்.

இந்த தீ விபத்து மோட்டோரெக்ஸ் நிறுவனத்தின் வளாகத்தில் கூரையில் நடைபெற்ற கட்டுமானப் பணிகளின்போது ஏற்பட்டதாக நிறுவனத்தின் தலைமைச் செயல் அதிகாரி எடி ஃபிஷர் தெரிவித்துள்ளார். சீலை வெல்டிங் செய்துகொண்டிருந்தபோது தீப்பிடித்து, பின்னர் அது அருகிலிருந்த எரிவாயு சிலிண்டருக்கும் பரவியதாக கூறப்படுகிறது.
சம்பவத்தின் போது ஏற்பட்ட வெடிப்பால் கருப்பு புகை வானத்தை மூடியது. இருப்பினும், யாருக்கும் காயம் ஏற்படவில்லை என்பது நிம்மதியான தகவலாகும். மேலும், இரசாயனங்கள் தீப்பிடிக்காததால் மிகப்பெரிய பேரழிவு தவிர்க்கப்பட்டதாகவும் நிறுவனம் தெரிவித்துள்ளது.
மாலை சுமார் 6.30 மணியளவில் தீ முழுமையாக கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வரப்பட்ட நிலையில், இரவு 7 மணிக்கு முன்னதாக அபாயம் இல்லை என அதிகாரிகள் அறிவித்தனர்.






