ரயில் மறியல் விவகாரம்… ரசிகர்கள் மீது குற்றவியல் வழக்கு பதிவு செய்த SBB!
ரயில் மறியல் விவகாரம்... ரசிகர்கள் மீது குற்றவியல் வழக்கு பதிவு செய்த SBB!

ரயில் மறியல் விவகாரம்… ரசிகர்கள் மீது குற்றவியல் வழக்கு பதிவு செய்த SBB!
சுவிட்சர்லாந்தில் கிராஸ்ஹாப்பர் கிளப் சூரிச், அதாவது GC கால்பந்து ரசிகர்கள் நடத்திய ரயில் மறியல் சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
பெர்ன் நோக்கிச் சென்ற ரயிலில், ரசிகர்கள் குறைந்தது 15 முறை அவசரகால பிரேக்கை இழுத்ததுடன், தீ எச்சரிக்கை அலாரத்தையும் இயக்கி ரயிலை நிறுத்தியதாக சுவிஸ் கூட்டாட்சி ரயில்வே, எஸ்.பி.பி. தெரிவித்துள்ளது.
இந்தச் சம்பவத்தால் மொத்தம் 85 ரயில்கள் பாதிக்கப்பட்டு, 6 மணி நேரம் 25 நிமிடங்கள் வரை தாமதம் ஏற்பட்டதாகவும், ஆயிரக்கணக்கான பயணிகள் சிரமத்திற்கு ஆளானதாகவும் அதிகாரிகள் கூறியுள்ளனர்.
அவசர பிரேக்கை தவறாகப் பயன்படுத்துவது பயணிகளின் உயிருக்கு ஆபத்தை ஏற்படுத்தக்கூடிய செயல் என்பதால், சம்பவம் தொடர்பாக எஸ்.பி.பி. குற்றவியல் புகார் பதிவு செய்துள்ளது.

அதே நேரத்தில், கால்பந்து ரசிகர்களுக்கான சிறப்பு ரயில் சேவைகள் தொடரும் என்றும், ஆனால் 2026–27 பருவத்திலிருந்து புதிய நடத்தை விதிமுறைகள் அமல்படுத்தப்படும் என்றும் எஸ்.பி.பி. அறிவித்துள்ளது.
விதிகளை மீறினால் ரயில் பெட்டிகளை காலி செய்வது, சிறப்பு ரயில்களை ரத்து செய்வது, மேலும் சட்ட நடவடிக்கைகள் எடுப்பது உள்ளிட்ட கடுமையான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும் என்றும் எச்சரிக்கப்பட்டுள்ளது.
கால்பந்து ரசிகர்களின் பாதுகாப்பான பயணத்தை உறுதி செய்வதோடு, பொதுப் பயணிகளின் பாதுகாப்பையும் ரயில் சேவையின் ஒழுங்கையும் காக்க அனைவரும் ஒத்துழைக்க வேண்டும் என்று எஸ்.பி.பி. வலியுறுத்தியுள்ளது.






