டிப்ஸுக்கு வரி இல்லை! 🇨🇭 நாடாளுமன்றம் எடுத்த அதிரடி முடிவு

டிப்ஸுக்கு வரி இல்லை! நாடாளுமன்றம் எடுத்த அதிரடி முடிவு…
டிப்ஸ்… அதாவது அன்பளிப்புத் தொகைக்கு வரியும் இல்லை, சமூகப் பாதுகாப்புப் பங்களிப்பும் இல்லை!
இதனைத் தொடர்வதற்கு சுவிஸ் நாடாளுமன்றம் தற்போது ஒப்புதல் அளித்துள்ளது.
திங்கட்கிழமை நடைபெற்ற தேசிய மன்ற வாக்கெடுப்பில், இந்தத் தீர்மானம் 125க்கு 51 வாக்குகள் என்ற வித்தியாசத்தில் நிறைவேற்றப்பட்டது.
21 உறுப்பினர்கள் வாக்களிக்கவில்லை.
இதற்கு முன்பே மாநிலங்கள் மன்றமும் இந்தத் தீர்மானத்திற்கு ஆதரவு தெரிவித்திருந்தது.
அப்படியானால் இந்த விவகாரம் ஏன் இவ்வளவு முக்கியத்துவம் பெறுகிறது?
பிரச்சினை Cash டிப்ஸ் அல்ல… Digital டிப்ஸ்!
இன்றைய காலத்தில் பல உணவகங்கள் மற்றும் சேவை நிறுவனங்களில் வாடிக்கையாளர்கள் ரொக்கமாக மட்டும் அல்லாமல், கார்டு அல்லது டிஜிட்டல் முறையிலும் டிப்ஸ் வழங்குகின்றனர்.
இதில் ஒரு கேள்வி எழுந்தது.
ரொக்கமாக வழங்கப்படும் டிப்ஸுக்கு வரி இல்லை என்றால்…
அதே டிப்ஸை கார்டு மூலம் கொடுத்தால் மட்டும் ஏன் வரி மற்றும் AHV பங்களிப்பு செலுத்த வேண்டும்?
இந்த வேறுபாடு சமத்துவமற்ற அணுகுமுறையை உருவாக்கும் என்று வாலாய்ஸ் மாநிலத்தைச் சேர்ந்த மாநிலங்கள் மன்ற உறுப்பினர் பீட் ரைடர் வாதிட்டார்.
அவரது தீர்மானத்தையே தேசிய மன்றம் இப்போது ஏற்றுக்கொண்டுள்ளது.
இதன் காரணமாக, கூட்டாட்சி மன்றம் தனது ஆரம்ப நிலைப்பாட்டிற்கு மாறாக சட்டத்தில் மாற்றம் செய்ய வேண்டிய சூழல் ஏற்பட்டுள்ளது.
ஆனால் இதற்கு எதிராகவும் வலுவான வாதங்கள் முன்வைக்கப்பட்டுள்ளன.
சமூக விவகாரங்களுக்கான அமைச்சர் எலிசபெத் பாம்-ஷ்னைடர், டிப்ஸ் சில சந்தர்ப்பங்களில் ஊழியர்களின் வருமானத்தில் 20 முதல் 30 சதவீதம் வரை இருக்கக்கூடும் என்று ஏற்கனவே சுட்டிக்காட்டியிருந்தார்.
அதனால், பெரிய அளவில் வழங்கப்படும் டிப்ஸ் உண்மையில் ஊதியத்தின் ஒரு பகுதியாக மாறுகிறதா என்பதைக் கண்காணிப்பது அவசியம் என கூட்டாட்சி மன்றம் கருதுகிறது.
மேலும், டிப்ஸுக்கு முழுமையான விலக்கு வழங்குவது அறிவிக்கப்படாத வேலை மற்றும் முறைகேடுகளுக்கு வாய்ப்பு ஏற்படுத்தலாம் என்று இடதுசாரி மற்றும் GLP உறுப்பினர்கள் எச்சரித்தனர்.

குறிப்பாக குறைந்த ஊதியம் பெறும் துறைகளில் பணிபுரிபவர்களுக்கு சமூகப் பாதுகாப்பு பாதிக்கப்படலாம் என்றும் அவர்கள் வாதிட்டனர்.
ஏனெனில் AHV பங்களிப்பு செலுத்தப்படாத வருமானம், எதிர்கால ஓய்வூதியக் கணக்கீட்டிலும் தாக்கத்தை ஏற்படுத்தக்கூடும்.
ஆனால் பெரும்பான்மை நாடாளுமன்ற உறுப்பினர்கள் வேறு கருத்தைத் தேர்ந்தெடுத்துள்ளனர்.
டிஜிட்டல் பணப்பரிவர்த்தனைகள் அதிகரித்து வரும் நிலையில், Cash டிப்ஸுக்கும் Digital டிப்ஸுக்கும் ஒரே விதிமுறை இருக்க வேண்டும் என்பதே அவர்களின் முக்கிய வாதம்.
இதனால், சுவிட்சர்லாந்தில் டிப்ஸ் வழங்கும் நடைமுறையில் ஒரு முக்கியமான சட்ட மாற்றத்திற்கான பாதை தற்போது திறந்துள்ளது.
இனி முக்கியமான கேள்வி…
டிப்ஸ் என்பது ஊழியரின் கூடுதல் வருமானமா? அல்லது வாடிக்கையாளர் வழங்கும் அன்பளிப்பா?
இந்த இரண்டிற்கும் இடையிலான சட்ட வரம்பை சுவிட்சர்லாந்து எப்படி நிர்ணயிக்கப் போகிறது என்பதுதான் அடுத்த கட்டத்தில் கவனிக்க வேண்டிய விஷயம்!






