“வங்கி பணம் பாதுகாப்பாக இல்லை” — நம்ப வைத்து கொள்ளையடித்த கும்பல்!
“வங்கி பணம் பாதுகாப்பாக இல்லை” — நம்ப வைத்து கொள்ளையடித்த கும்பல்!

“வங்கி பணம் பாதுகாப்பாக இல்லை” — நம்ப வைத்து கொள்ளையடித்த கும்பல்!
செயின்ட் கேலன் மாகாணத்தில் தொலைபேசி மோசடி சம்பவங்கள் அதிர்ச்சியளிக்கும் வகையில் அதிகரித்து வருகின்றன.
வில் நகரைச் சேர்ந்த 85 வயது முதியவர் ஒருவர், தொலைபேசி மோசடியாளர்களிடம் சுமார் 250,000 சுவிஸ் பிராங்குகளை இழந்துள்ளார்.
வங்கி ஊழியர்கள் என்று கூறி அவரை தொடர்புகொண்ட மோசடியாளர்கள், “உங்கள் பணம் இனி பாதுகாப்பாக இல்லை” என்று நம்ப வைத்துள்ளனர்.
அதன் பின்னர், வங்கியில் இருந்து பல பெரிய தொகைகளை எடுத்த அந்த முதியவரை, வெவ்வேறு இடங்களில் பணத்தைச் செலுத்துமாறு அவர்கள் அறிவுறுத்தியுள்ளனர். பின்னர் அந்தப் பணத்தை மோசடியாளர்கள் அங்கிருந்து வசூலித்துள்ளனர்.
இறுதியில் சந்தேகம் ஏற்பட்ட முதியவர் காவல்துறையை அணுகியபோதுதான், தான் மோசடிக்கு ஆளானதை உணர்ந்துள்ளார்.
மேலும் அதே முதியவரை மீண்டும் தொடர்புகொண்டு பணம் வசூலிக்க முயன்றபோது, 21 வயதான உக்ரேனிய இளைஞர் ஒருவர் காவல்துறையால் கைது செய்யப்பட்டுள்ளார்.
இதற்கிடையில், செப்டம்பர் 10ஆம் தேதி வாட்வில் பகுதியில் நடந்த மற்றொரு பண ஒப்படைப்பு சம்பவத்தில் 22 மற்றும் 23 வயதுடைய இரண்டு பிரெஞ்சு இளைஞர்களும் கைது செய்யப்பட்டுள்ளனர்.

மேலும் செப்டம்பர் 14ஆம் தேதி, 20,000 பிராங்குகளை ரொக்கமாக எடுத்துத் தருமாறு தொலைபேசியில் அறிவுறுத்தப்பட்ட 55 வயது பெண்ணிடமிருந்து பணத்தைப் பெற வந்ததாகக் கூறப்படும் 20 வயதான உக்ரேனிய இளைஞரும் கைது செய்யப்பட்டுள்ளார்.
இப்போது இந்த வழக்குகளின் பின்னணியில் ஒரே மோசடி கும்பல் செயல்படுகிறதா, கைது செய்யப்பட்டவர்களின் பங்கு என்ன, மேலும் யார் யார் இதில் தொடர்புடையவர்கள் என்பது குறித்து விசாரணை தீவிரமாக நடைபெற்று வருகிறது.
மிகவும் அதிர்ச்சியான விஷயம் என்னவென்றால் — ஆகஸ்ட் மாத தொடக்கம் முதல் மட்டும், செயின்ட் கேலன் மாகாணத்தில் இதுபோன்ற 9 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன.
ஆரம்பகட்ட விசாரணையின்படி, மொத்தம் சுமார் 750,000 சுவிஸ் பிராங்குகள் மோசடி செய்யப்பட்டிருக்கலாம்!
தொலைபேசியில் யாராவது வங்கி ஊழியர், காவல்துறை அல்லது பாதுகாப்பு அதிகாரி என்று கூறி ரொக்கப் பணத்தை எடுக்கச் சொன்னால், உடனடியாக நம்ப வேண்டாம். அழைப்பை துண்டித்து, சம்பந்தப்பட்ட நிறுவனத்தின் அதிகாரப்பூர்வ எண்ணை நீங்களே தொடர்பு கொள்ளுங்கள்.






