சூரிச் – கிளாட்புருக் பகுதியில் தமிழ்ப் பெண்ணிடம் மர்ம நபர்களின் துணிகர செயல்
சூரிச் - கிளாட்புருக் பகுதியில் தமிழ்ப் பெண்ணிடம் மர்ம நபர்களின் துணிகர செயல்

சூரிச் – கிளாட்புருக் பகுதியில் தமிழ்ப் பெண்ணிடம் மர்ம நபர்களின் துணிகர செயல்
சூரிச் கிளாட்புருக் பகுதியில் கடந்த ஜூன் 12 ஆம் திகதி வெள்ளிக்கிழமை மாலை இடம்பெற்றதாகக் கூறப்படும் ஒரு சந்தேகத்திற்கிடமான சம்பவம் அப்பகுதியில் வாழும் ஈழத் தமிழர்களிடையே பெரும் அதிர்ச்சியையும் பரபரப்பையும் ஏற்படுத்தியுள்ளது.
கிடைத்த தகவல்களின்படி, கிளாட்புருக் பகுதியில் வசித்து வரும் ஒரு ஈழத் தமிழ்ப் பெண் கடந்த வெள்ளிக்கிழமை மாலை சுமார் 5.00 மணியளவில் தனது வீட்டிற்கு அருகிலுள்ள வைத்தியரிடம் சென்று மீண்டும் தனது வீட்டிற்கு திரும்பிச்சென்று கொண்டிருந்துள்ளார். அப்போது அவரது அருகில் வந்த ஒரு கார் திடீரென நின்றதாக கூறப்படுகிறது.
காருக்குள் இருந்த ஒரு பெண் குறிப்பிட்ட முகவரியொன்றை காட்டி அதனைப் பற்றி விசாரித்துள்ளார். அதற்கு தனக்குத் தெரியாது என தமிழ்ப் பெண் பதிலளித்துள்ளார். பின்னர் அந்த வாகனம் அங்கிருந்து சிறிது தூரம் சென்று மீண்டும் நின்றுள்ளது. மீண்டும் அதே பெண் மற்றொரு முகவரியை காட்டி அது எங்கு உள்ளது என்று கேட்டதாகத் தெரிவிக்கப்படுகிறது.
அதற்கும் தெரியாது என்று பதிலளித்த நிலையில், எதிர்பாராத விதமாக காருக்குள் இருந்த பெண் தமிழ்ப் பெண்ணின் கழுத்தை திடீரென இறுக்கமாகப் பிடித்ததாக கூறப்படுகிறது. சில நொடிகள் அவரது கழுத்தை பிடித்திருந்த பின்னர், அந்த வாகனம் வேகமாக அங்கிருந்து சென்றுவிட்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
இந்த சம்பவம் மிகவும் திடீரென நடந்ததால் அதிர்ச்சியடைந்த தமிழ்ப் பெண், வாகனத்தின் இலக்கத் தகட்டை அல்லது அதிலிருந்தவர்களின் விபரங்களை கவனிக்க முடியவில்லை என கூறப்படுகிறது. பின்னர் வீட்டிற்கு திரும்பிய அவர்இ சிறிது நேரம் கழித்து தனது கழுத்தில் அணிந்திருந்ததங்கச் சங்கிலி அறுக்கப்பட்டு காணாமல் போயிருப்பதை கவனித்துள்ளார்.
குறிப்பாக, அந்த நகை எவ்வாறு அறுக்கப்பட்டது என்பது அவருக்கே இன்னும் புரியாத புதிராக இருப்பதாகவும், சம்பவம் இடம்பெற்ற தருணத்தில் எந்தவித வலியோ அல்லது சந்தேகமோ ஏற்படவில்லை என்றும் அவர் தனது அறிமுகமானவர்களிடம் தெரிவித்துள்ளார்.

இந்த சம்பவம் குறித்து அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில் வாழும் தமிழர்கள் மத்தியில் பாதுகாப்பு தொடர்பான அச்சம் ஏற்பட்டுள்ளது. அண்மைக் காலங்களில் சுவிட்சர்லாந்தின் சில நகரங்களில் கவனத்தைத் திசைதிருப்பி நகைகள் மற்றும் பெறுமதியான பொருட்களை அபகரிக்கும் சம்பவங்கள் பதிவாகியுள்ள நிலையில், பொதுமக்கள் அதிக அவதானத்துடன் இருக்க வேண்டும் என சமூக ஆர்வலர்கள் வலியுறுத்துகின்றனர்.
இந்த சம்பவம் தொடர்பாக அதிகாரப்பூர்வ காவல்துறை முறைப்பாடு பதிவு செய்யப்பட்டுள்ளதா என்பது உடனடியாக உறுதிப்படுத்தப்படவில்லை. இருப்பினும், இதுபோன்ற சந்தேகத்திற்கிடமான சம்பவங்களுக்கு உள்ளாகும் நபர்கள் உடனடியாக காவல்துறைக்கு தகவல் வழங்குவதுடன், வாகன இலக்கத் தகடு, சந்தேக நபர்களின் அடையாளம் மற்றும் சம்பவ இடம் தொடர்பான தகவல்களை பதிவு செய்து வைத்திருக்குமாறும் அறிவுறுத்தப்படுகின்றனர்.
சூரிச் கிளாட்புருக் பகுதியில் இடம்பெற்றதாகக் கூறப்படும் இந்த சம்பவம், வெளிநாடுகளில் வாழும் தமிழர்கள் தங்களது அன்றாட பாதுகாப்பு தொடர்பில் மேலும் விழிப்புணர்வுடன் இருக்க வேண்டியதன் அவசியத்தை மீண்டும் நினைவூட்டியுள்ளது.






