சுவிஸ் நடுநிலையை வலுப்படுத்தும் முயற்சிக்கு ரஷ்யா ஆதரவு
சுவிஸ் நடுநிலையை வலுப்படுத்தும் முயற்சிக்கு ரஷ்யா ஆதரவு

சுவிஸ் நடுநிலையை வலுப்படுத்தும் முயற்சிக்கு ரஷ்யா ஆதரவு – வாக்காளர்களிடம் ‘ஆம்’ வாக்களிக்க அழைப்பு
சுவிட்சர்லாந்தின் நடுநிலைத் தன்மையை மேலும் வலுப்படுத்தும் நோக்கில் முன்வைக்கப்பட்டுள்ள வலதுசாரி அரசியல் முன்மொழிவுக்கு ஆதரவாக வாக்களிக்குமாறு ரஷ்யா, சுவிஸ் வாக்காளர்களுக்கு வெளிப்படையாக அழைப்பு விடுத்துள்ளது.
செப்டம்பர் 27ஆம் திகதி சுவிஸ் மக்கள் இந்த முன்மொழிவு தொடர்பாக வாக்கெடுப்பில் பங்கேற்க உள்ளனர். நாட்டின் பாரம்பரிய நடுநிலைத் தன்மையை மேலும் கடுமையாகப் பாதுகாக்க வேண்டும் என்பதே இந்த முன்மொழிவின் முக்கிய நோக்கமாகும்.
இந்த விவகாரத்தில் ரஷ்ய வெளியுறவு அமைச்சகமும் தற்போது வெளிப்படையாக தனது நிலைப்பாட்டைத் தெரிவித்துள்ளது. ரஷ்ய வெளியுறவு அமைச்சகத்தின் செய்தித் தொடர்பாளர் மரியா சகாரோவா, நீண்ட பதிவொன்றை Telegram தளத்தில் வெளியிட்டு, இந்த முன்மொழிவுக்கு சுவிஸ் மக்கள் ‘ஆம்’ என வாக்களிப்பது முக்கியமானதாக இருக்கும் என குறிப்பிட்டுள்ளார்.

குறிப்பாக, இந்த முன்மொழிவு ஏற்றுக்கொள்ளப்பட்டால் சுவிட்சர்லாந்து பிற நாடுகளுக்கு எதிராக பொருளாதாரத் தடைகள் அல்லது பிற வகையான தடைகளை விதிப்பதற்கான வாய்ப்பு கட்டுப்படுத்தப்படும் என ரஷ்ய தரப்பு கருதுகிறது. இதில் ரஷ்யாவுக்கு எதிராக விதிக்கப்படும் தடைகளும் அடங்கும் என சகாரோவா தனது பதிவில் குறிப்பிட்டுள்ளார்.
உக்ரைன் மீதான ரஷ்யாவின் படையெடுப்புக்குப் பின்னர், சுவிட்சர்லாந்து ஐரோப்பிய ஒன்றியத்தின் பல்வேறு தடைகளை ஏற்றுக்கொண்டு ரஷ்யாவுக்கு எதிராக பொருளாதாரத் தடைகளை அமல்படுத்தியுள்ளது. இதனால், சுவிட்சர்லாந்தின் பாரம்பரிய நடுநிலை கொள்கை குறித்த அரசியல் விவாதம் கடந்த சில ஆண்டுகளில் மேலும் தீவிரமடைந்துள்ளது.
இந்நிலையில், செப்டம்பர் 27ஆம் திகதி நடைபெறவுள்ள வாக்கெடுப்பு சுவிட்சர்லாந்தின் எதிர்கால நடுநிலை கொள்கைக்கு முக்கியமானதாக பார்க்கப்படுகிறது. அதேவேளை, இந்த விவகாரத்தில் ரஷ்யா வெளிப்படையாக ‘ஆம்’ வாக்குக்கு ஆதரவு தெரிவிப்பது சுவிஸ் அரசியல் மற்றும் பொதுமக்கள் மத்தியில் புதிய விவாதத்தையும் ஏற்படுத்தியுள்ளது.





