கொள்ளையடித்துவிட்டு தூங்கிய திருடர்கள்! புல்வெளியில் படுத்திருந்தபோதே கைது!
கொள்ளையடித்துவிட்டு தூங்கிய திருடர்கள்! புல்வெளியில் படுத்திருந்தபோதே கைது!

கொள்ளையடித்துவிட்டு தூங்கிய திருடர்கள்! புல்வெளியில் படுத்திருந்தபோதே கைது!
சுவிட்சர்லாந்தின் செயின்ட் கேலனில் கொள்ளையடித்ததாக சந்தேகிக்கப்படும் இருவர், காவல்துறையினரிடம் சிக்கிய விதம் தற்போது கவனம் பெற்றுள்ளது!
புதன்கிழமை அதிகாலை 4 மணிக்குச் சற்றுப் பின்னர், ஸுர்ச்சர்ஸ்ட்ராஸ் பகுதியில் உள்ள எரிபொருள் நிலையம் ஒன்றில் திருட்டு இடம்பெற்றதாக செயின்ட் கேலன் அவசர அழைப்பு மற்றும் கட்டுப்பாட்டு மையத்துக்கு தகவல் கிடைத்தது.
உடனடியாக சம்பவ இடத்துக்கு விரைந்த நகர காவல்துறை அதிகாரிகள், எரிபொருள் நிலையத்தில் கொள்ளை இடம்பெற்றதற்கான தெளிவான தடயங்களைக் கண்டுபிடித்தனர்.
மாகாண காவல்துறையின் உதவியுடன் கட்டிடத்தையும் சோதனை செய்தனர். ஆனால் சந்தேக நபர்கள் அங்கு இல்லை.
எனினும், பணம் செலுத்தும் பகுதியில் இருந்து சிகரெட்டுகள், குளிர்பானங்கள் மற்றும் உணவுப் பொருட்கள் உள்ளிட்ட பல பொருட்கள் திருடப்பட்டிருந்தது தெரியவந்தது.
விசாரணையைத் தொடர்ந்து, அதே கட்டிடத்தில் இயங்கி வந்த மற்றொரு வணிக நிறுவனத்திலும் கொள்ளையடிக்க முயற்சி நடந்திருந்தது காவல்துறையினரால் கண்டுபிடிக்கப்பட்டது.

ஆனால் இந்தக் கதையில் எதிர்பாராத திருப்பம் ஒன்று ஏற்பட்டது!
காலை 7.30 மணிக்கு சற்று முன்பு, சம்பவ இடத்தில் காவல்துறையினர் விசாரணையில் ஈடுபட்டிருந்தபோது, ஒருவர் அவர்களை அணுகி அருகிலிருந்த புல்வெளியில் இரண்டு ஆண்கள் தூங்கிக் கொண்டிருப்பதாக தெரிவித்தார்.
அங்கு சென்ற காவல்துறையினர், கொள்ளையில் தொடர்புடையவர்கள் என சந்தேகிக்கப்பட்ட அந்த இருவரையும் கைது செய்தனர்.
அதாவது, கொள்ளையடித்துவிட்டு வெகுதூரம் தப்பிச் செல்லாமல், சம்பவ இடத்துக்கு அருகிலேயே தூங்கச் சென்றதாகக் கூறப்படும் இருவரும் காவல்துறையிடம் சிக்கியுள்ளனர்!
இந்த சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணை தொடர்ந்து நடைபெற்று வருகிறது.






