சுவிட்சர்லாந்தில் வேக வரம்பு மீறல் அதிகரிப்பு: விபத்து தடுப்பு அமைப்பு எச்சரிக்கை
சுவிட்சர்லாந்தில் வேக வரம்பு மீறல் அதிகரிப்பு: விபத்து தடுப்பு அமைப்பு எச்சரிக்கை

சுவிட்சர்லாந்தில் வேக வரம்பு மீறல் அதிகரிப்பு: விபத்து தடுப்பு அமைப்பு எச்சரிக்கை
சுவிட்சர்லாந்து சாலைகளில் வேக வரம்புகளை மீறும் வாகனங்களின் எண்ணிக்கை அதிகரித்து வருவதாக BFU எனப்படும் சுவிட்சர்லாந்து விபத்து தடுப்பு அமைப்பு எச்சரித்துள்ளது. புதிய ஆய்வின் படி, நாட்டில் பயணிக்கும் ஒவ்வொரு மூன்று வாகனங்களில் ஒன்றாவது அனுமதிக்கப்பட்ட வேகத்தை மீறிச் செல்கிறது.
BFU வெளியிட்ட தகவலின்படி, சுவிட்சர்லாந்தில் ஏற்படும் கடுமையான சாலை விபத்துகளில் எட்டில் ஒன்று அதிக வேகத்துடன் தொடர்புடையதாகும். இதில் நிர்ணயிக்கப்பட்ட வேக வரம்பை மீறுவது மட்டுமல்லாமல், சாலை மற்றும் காலநிலை நிலைக்கு பொருந்தாத வேகத்தில் செலுத்துவதும் அடங்கும்.
நாட்டளவில் மேற்கொள்ளப்பட்ட ஆய்வில், சுமார் மூன்றில் ஒரு பகுதி சாரதிகள் சாலைகளில் குறிப்பிடப்பட்டுள்ள வேக வரம்புகளை மதிப்பதில்லை என்பது தெரியவந்துள்ளது.
குறிப்பாக 80 கிமீ வேக வரம்பு உள்ள வெளிப்புற சாலைகளில் நிலைமை மோசமடைந்துள்ளதாக BFU தெரிவித்துள்ளது. 2019ஆம் ஆண்டு 21 சதவீத வாகனங்கள் மட்டுமே வேக வரம்பை மீறியிருந்த நிலையில், தற்போது அது 27 சதவீதமாக உயர்ந்துள்ளது.

BFU இயக்குநர் ஸ்டீபன் சிக்ரிஸ்ட் (Stefan Siegrist), “வெளிப்புற சாலைகளில் நிகழும் விபத்துகளில் நான்கில் ஒன்று வேகத்துடன் தொடர்புடையது” என எச்சரித்துள்ளார். ஆண்டுதோறும் இவ்வாறான சாலைகளில் சராசரியாக 116 பேர் உயிரிழக்கின்றனர்; மேலும் சுமார் 1,400 பேர் கடுமையாக காயமடைகின்றனர்.
இதற்கிடையில், சில அரசியல்வாதிகள் வெளிப்புற சாலைகளில் வேக வரம்பை 80 கிமீயிலிருந்து 100 கிமீ ஆகவும், நெடுஞ்சாலைகளில் 120 கிமீயிலிருந்து 130 கிமீ ஆகவும் உயர்த்த வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர்.
ஆனால் BFU இதற்கு கடுமையாக எதிர்ப்பு தெரிவித்துள்ளது. அதிகபட்ச வேகத்தை உயர்த்தினால், மக்கள் மேலும் வேகமாக ஓட்டத் தொடங்குவார்கள் என்றும், அதனால் எதிர்வினை அளிக்கும் நேரம் குறையும், பிரேக் தூரம் அதிகரிக்கும் மற்றும் விபத்து அபாயம் உயர்வதாகவும் அமைப்பு எச்சரித்துள்ளது.
குறிப்பாக நேருக்கு நேர் மோதும் விபத்துகள் அதிகரிக்கும் அபாயம் இருப்பதாகவும், இத்தகைய விபத்துகளில் விதிமுறைகளை பின்பற்றும் நிரபராதிகளும் பாதிக்கப்படுவார்கள் என்றும் BFU குறிப்பிட்டுள்ளது.
நெடுஞ்சாலைகளில் தற்போதைய 120 கிமீ வேக வரம்பை 130 கிமீ ஆக உயர்த்தினால், ஆண்டுதோறும் உயிரிழப்புகளின் எண்ணிக்கை இரட்டிப்பாக அதிகரிக்கக்கூடும் என ஆய்வு கணக்கீடுகள் தெரிவிக்கின்றன.
இதனால் சுவிட்சர்லாந்தில் தற்போது அமலில் உள்ள வேக வரம்புகளை உயர்த்தும் முயற்சிகளை தவிர்க்க வேண்டும் என BFU வலியுறுத்தியுள்ளது.
மேலும், சாலை பாதுகாப்பிற்காக வேகத்தை சாலை மற்றும் காலநிலைக்கு ஏற்ப மாற்றிக் கொள்ளவும், போதுமான இடைவெளியைப் பராமரிக்கவும், பாதுகாப்பு உதவி அமைப்புகள் கொண்ட வாகனங்களை பயன்படுத்தவும் BFU பரிந்துரைத்துள்ளது.
மூலம்: BFU





