உதவித்தற்கொ*லை செய்வதற்காக சுவிட்சர்லாந்தை நோக்கி அதிகரிக்கும் வெளிநாட்டவர்கள் சுவிட்சர்லாந்தில் அமலில் உள்ள உதவியுடன் மரணம் (assisted dying) தொடர்பான சட்டம் உலகின் பல நாடுகளை விட சற்றே சுதந்திரமானதாக இருப்பதால், வெளிநாட்டு நபர்கள் அதிகரித்து இந்த நாட்டை நாடி வருவது குறித்து புதிய தகவல்கள் வெளியாகியுள்ளன. திங்கட்கிழமை வெளியான ஊடக அறிக்கைகளின்படி, வெளிநாட்டவர்களுக்கும் சேவைகள் வழங்கும் சில அமைப்புகள் தற்போது அதிக கோரிக்கைகள் காரணமாக தங்களின் திறன் வரம்பை எட்டியுள்ளன. சுவிட்சர்லாந்தில் இயங்கும் EXIT போன்ற அமைப்புகள் நாட்டில் வசிக்கும் நபர்களுக்கு மட்டும் சேவைகளை வழங்குகின்றன. ஆனால் வெளிநாட்டவர்களையும் ஏற்றுக்கொள்ளும் அமைப்புகளில் ஒன்றான Dignitas, கடந்த ஆண்டில் இதுவரை இல்லாத அளவுக்கு அதிக கோரிக்கைகள் வந்துள்ளதாக தெரிவித்துள்ளது. குறிப்பாக ஆங்கிலம் பேசும் நாடுகளிலிருந்து வரும் விண்ணப்பங்கள் கணிசமாக உயர்ந்துள்ளதாக கூறப்படுகிறது. கடந்த ஆண்டில் Dignitas சேவையை பயன்படுத்திய 280 பேரில், ஐந்தில் ஒருபங்கு அமெரிக்காவைச் சேர்ந்தவர்களாக இருந்தனர். அதேபோல், ஆறில் ஒருபங்கு பிரித்தானியாவைச் சேர்ந்தவர்களாக இருந்ததாக தகவல்கள் கூறுகின்றன. இது சுவிட்சர்லாந்து ‘மரண சுற்றுலா’ (suicide tourism) என்ற விவாதத்திற்கும் மீண்டும் தீனி போட்டு வருகிறது. சுவிட்சர்லாந்தில் உதவியுடன் மரணம் சட்டபூர்வமாக அனுமதிக்கப்பட்டுள்ளதுடன், கடுமையான நிபந்தனைகளும் விதிக்கப்பட்டுள்ளன. இதில் நோயாளியின் சுய விருப்பம், மருத்துவ ஆலோசனை மற்றும் சட்ட பரிசீலனை போன்ற அம்சங்கள் முக்கிய பங்காற்றுகின்றன. இருப்பினும், வெளிநாட்டவர்களின் அதிகரித்த வருகை, இந்த சட்டத்தின் சமூக மற்றும் நெறிமுறை தாக்கங்கள் குறித்து அரசியல் மற்றும் சமூக மட்டங்களில் மீண்டும் விவாதங்களை எழுப்பியுள்ளது. எதிர்காலத்தில் இந்த சேவைகளுக்கான கட்டுப்பாடுகள் மாற்றப்படுமா என்பது குறித்து அரசியல் வட்டாரங்களில் ஆர்வம் அதிகரித்து வருகிறது.