சுவிட்சர்லாந்தில் உளவுத்துறைக்கு கூடுதல் அதிகாரங்கள்: தேசிய சபை ஒப்புதல்
சுவிட்சர்லாந்தில் உளவுத்துறைக்கு கூடுதல் அதிகாரங்கள்: தேசிய சபை ஒப்புதல்

சுவிட்சர்லாந்தில் உளவுத்துறைக்கு கூடுதல் அதிகாரங்கள்: தேசிய சபை ஒப்புதல்
பயங்கரவாதம், இணையத் தாக்குதல்கள் மற்றும் வெளிநாட்டு தலையீட்டு அச்சுறுத்தல்கள் அதிகரித்து வருவதாகக் கூறி, சுவிட்சர்லாந்தின் கூட்டாட்சி உளவுத்துறைக்கு (Federal Intelligence Service) கூடுதல் அதிகாரங்களை வழங்கும் சட்ட திருத்தத்தை தேசிய சபை ஒப்புதல் அளித்துள்ளது.
புதன்கிழமை நடைபெற்ற வாக்கெடுப்பில், இந்த திருத்தப்பட்ட உளவுத்துறை சட்டத்திற்கு ஆதரவாக 111 வாக்குகளும், எதிராக 40 வாக்குகளும் பதிவானதுடன், 21 உறுப்பினர்கள் வாக்களிப்பில் பங்கேற்காமல் விலகியிருந்தனர்.
புதிய சட்டத்தின் கீழ், வெளிநாட்டு அரசுகளின் செல்வாக்கு நடவடிக்கைகளை கண்காணிக்கவும், நிதி நிறுவனங்களிடமிருந்து தகவல்களை சேகரிக்கவும், கண்காணிப்பில் உள்ள வாகனங்களில் tracking சாதனங்களை பொருத்தவும் உளவுத்துறைக்கு அனுமதி வழங்கப்படவுள்ளது.

மேலும், ஆபத்தான நபர்கள் என சந்தேகிக்கப்படுவோரின் நடத்தை மற்றும் தகவல்களை அடிப்படையாகக் கொண்டு செயற்கை நுண்ணறிவு (AI) தொழில்நுட்பத்தின் மூலம் தனிப்பட்ட சுயவிவரங்களையும் உருவாக்க முடியும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஆனால், இந்த சட்ட மாற்றத்திற்கு இடதுசாரி அரசியல்வாதிகள் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். “இது கண்காணிப்பு அரசை நோக்கி செல்லும் கவலைக்கிடமான நடவடிக்கை” என அவர்கள் எச்சரித்துள்ளனர்.
கூட்டாட்சி நிர்வாக நீதிமன்றம் முன்னர் சில கண்காணிப்பு நடவடிக்கைகளை அரசியலமைப்புக்கு முரணானவை என தீர்ப்பளித்திருந்ததையும் எதிர்க்கட்சியினர் நினைவூட்டியுள்ளனர்.
தேசிய சபையில் நிறைவேற்றப்பட்டுள்ள இந்த சட்ட திருத்தம் தற்போது மாநிலங்களவை (Council of States) பரிசீலனைக்கு அனுப்பப்பட்டுள்ளது. WRS





