சுவிஸில் இருந்து யாழ்ப்பாணம் வந்த முதியவர் கொலை தொடர்பில் வெளியான புதிய தகவல்கள்
சுவிஸில் இருந்து யாழ்ப்பாணம் வந்த முதியவர் கொலை தொடர்பில் வெளியான புதிய தகவல்கள்

சுவிஸில் இருந்து யாழ்ப்பாணம் வந்த முதியவர் கொலை தொடர்பில் வெளியான புதிய தகவல்கள்
சுவிஸில் இருந்து யாழ்ப்பாணம் – சண்டிலிப்பாய் பகுதிக்கு வருகை தந்த முதியவர் ஒருவர் கடந்த சில வாரங்களுக்கு முன்னர் அவரது வீட்டில் வைத்து படுகொலை செய்யப்பட்டதுடன் நகை மற்றும் பணம் என்பன களவாடப்பட்டிருந்தன.
குறித்த கொலையை மேற்கொண்ட சந்தேகநபர்கள் தலைமறைவாகி இருந்த நிலையில் நேற்று அதிகாலை (06) யாழ்ப்பாண பகுதியில் வைத்து கைது செய்யப்பட்டனர். கைது செய்யப்பட்ட இருவரிடமிருந்து பல அதிர்ச்சிகரமான தகவல்கள் வெளியாகியுள்ளன.
கொள்ளை நோக்கத்துடன் வீட்டிற்குள் நுழைந்ததாகவும், தங்களை முதியவர் அடையாளம் கண்டதால் அவரை கொலை செய்ய நேர்ந்ததாகவும் அவர்கள் ஆரம்ப கட்ட விசாரணைகளில் வாக்குமூலம் வழங்கியுள்ளதாக பொலீசார் தெரிவித்துள்ளனர்.
யாழ்ப்பாணம் சண்டிலிப்பாய் பகுதியைச் சேர்ந்த வள்ளிபுரம் சந்திரசேகரம் என்பவர் கடந்த ஏப்ரல் மாதம் சுவிட்சர்லாந்தில் இருந்து தனது சொந்த வீட்டிற்கு விடுமுறைக்காக வந்திருந்தார். இரண்டு மாதங்கள் தங்கி மீண்டும் சுவிஸிற்கு திரும்ப தயாராகியிருந்த நிலையில், அவருடன் தொடர்பு கொள்ள முடியவில்லை என அவரது குடும்பத்தினர் மாணிப்பாய் பொலீசாருக்கு தகவல் வழங்கியிருந்தனர்.
அதன்படி கடந்த மே 16ஆம் திகதி பொலீசார் அவரது வீட்டிற்கு சென்று விசாரணைகளை ஆரம்பித்தனர். அப்போது வீட்டில் பொருத்தப்பட்டிருந்த கண்காணிப்பு கமெராக்கள் அனைத்தும் உடைத்து சேதப்படுத்தப்பட்டிருந்தது கண்டறியப்பட்டது. வீட்டின் கதவுகள் பூட்டப்பட்டிருந்ததால் வெளியே இருந்து சுற்றுப்புறங்களில் தேடுதல் நடத்தப்பட்ட நிலையில், வீட்டின் உள்ளிருந்து துர்நாற்றம் வீசியதை தொடர்ந்து பொலீசார் கதவை உடைத்து உள்ளே நுழைந்தனர்.
அங்கு இரத்த வெள்ளத்தில் உயிரிழந்த நிலையில் வள்ளிபுரம் சந்திரசேகரம் கிடந்ததாக தெரிவிக்கப்பட்டது. சம்பவ இடத்திற்கு சென்ற நீதவான் விசாரணைகளை மேற்கொண்டதுடன், சடலம் யாழ் போதனா வைத்தியசாலைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைக்கப்பட்டது.
பிரேத பரிசோதனையில், கூரிய ஆயுதத்தால் தாக்கப்பட்டு எட்டுக்கும் மேற்பட்ட காயங்கள் ஏற்பட்டிருந்தமை தெரியவந்துள்ளது. கடுமையான இரத்தப்போக்கே உயிரிழப்பிற்கான காரணம் என மருத்துவ அறிக்கையில் உறுதி செய்யப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.
இதனை தொடர்ந்து மாணிப்பாய் பொலீசார் தீவிர விசாரணைகளை முன்னெடுத்தனர். சம்பவ இடத்தில் நேரடி தடயங்கள் பெரிதும் கிடைக்காத நிலையில், சேதப்படுத்தப்பட்டிருந்த சிசிடிவி கமெராக்களில் பதிவு செய்யப்பட்டிருந்த பழைய காட்சிகளை ஆய்வு செய்தனர். அந்த காட்சிகளில் இரண்டு பேர் வீட்டிற்குள் நுழையும் காட்சி பதிவாகியிருந்ததாக பொலீசார் தெரிவித்துள்ளனர்.

இதையடுத்து கொலை செய்யப்பட்ட முதியவரின் பின்னணி மற்றும் தொடர்புகள் தொடர்பிலும் விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டன. அவர் ஒவ்வொரு விடுமுறையிலும் சுவிஸில் இருந்து வந்து கிராமத்தில் தங்கி வாழ்வதோடு, அப்பகுதி மக்களுக்கும் அயலவர்களுக்கும் உதவிகள் செய்து வந்திருந்தார் என்பதும் தெரியவந்துள்ளது.
விசாரணைகள் தீவிரமடைந்த நிலையில், சம்பவம் நடந்த வீட்டிலிருந்து மூன்று வீடுகள் தள்ளி வசித்து வந்த ஒருவர் திடீரென தலைமறைவாகியிருப்பது பொலீசாரின் கவனத்திற்கு வந்தது. அவரை தேடிய பொலீசார் யாழ்ப்பாணம் பகுதியில் வைத்து கைது செய்தனர். அவரிடம் நடத்தப்பட்ட விசாரணையின் அடிப்படையில் அளவெட்டி பகுதியைச் சேர்ந்த மற்றொரு நபரும் கைது செய்யப்பட்டார்.
கைது செய்யப்பட்ட இருவரும், பணம் மற்றும் தங்க நகைகளை கொள்ளையடிக்கும் நோக்கத்திலேயே வீட்டிற்குள் சென்றதாகவும், முதியவர் தங்களை கண்டறிந்ததால் தாக்குதல் நடத்த வேண்டிய சூழ்நிலை ஏற்பட்டதாகவும் ஒப்புக்கொண்டுள்ளதாக பொலீசார் தெரிவித்துள்ளனர். கொள்ளையடிக்கப்பட்ட நகைகள் மற்றும் பணங்களில் சிலவற்றை ஏற்கனவே செலவழித்துவிட்டதாகவும் அவர்கள் தெரிவித்துள்ளதாக கூறப்படுகிறது.
அவர்களின் தகவல்களின் அடிப்படையில், கொள்ளையடிக்கப்பட்ட நகைகளில் ஒரு பகுதி தற்போது மீட்கப்பட்டுள்ளதாகவும் பொலீசார் உறுதிப்படுத்தியுள்ளனர்.
இந்த நிலையில் கைது செய்யப்பட்ட இருவரும் மல்லாகம் நீதவான் நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்பட்டனர். மேலதிக விசாரணைகளுக்காக இருவரையும் இரண்டு நாட்கள் தடுப்பு காவலில் வைத்து விசாரிக்க நீதிமன்றம் அனுமதி வழங்கியுள்ளது.
இந்த தடுப்பு காவல் உத்தரவு ஏன் பெறப்பட்டது என்பது தொடர்பிலும் முக்கிய தகவல்கள் வெளியாகியுள்ளன. சம்பவத்துடன் தொடர்புடைய மேலும் சிலர் தலைமறைவாக இருக்கலாம் என சந்தேகிக்கப்படுவதாகவும், அவர்களை கைது செய்வதற்காகவே தொடர்ச்சியான விசாரணைகள் முன்னெடுக்கப்படுவதாகவும் பொலீசார் தெரிவித்துள்ளனர்.
மேலும் கைது செய்யப்பட்டுள்ள இருவருக்கும் வேறு கொள்ளை மற்றும் குற்றச் சம்பவங்களுடன் தொடர்பு உள்ளதா என்பது குறித்தும் விசாரணைகள் நடைபெற்று வருகின்றன. இரண்டு நாள் விசாரணைகள் நிறைவடைந்த பின்னரே மேலதிக உத்தியோகபூர்வ தகவல்கள் நீதிமன்றத்தில் சமர்ப்பிக்கப்படும் என பொலீசார் தெரிவித்துள்ளனர்.
இந்த சம்பவம் யாழ்ப்பாணம் மட்டுமன்றி வெளிநாடுகளில் இருந்து தாயகத்திற்கு வருகை தரும் இலங்கையர்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சியையும் அச்சத்தையும் ஏற்படுத்தியுள்ளது.





