நீச்சல் குளங்களில் ஒழுங்கீனம் அதிகரிப்பு – கடும் வெப்பத்தால் பாதுகாப்பு குறித்து மீண்டும் கவலை
நீச்சல் குளங்களில் ஒழுங்கீனம் அதிகரிப்பு – கடும் வெப்பத்தால் பாதுகாப்பு குறித்து மீண்டும் கவலை

நீச்சல் குளங்களில் ஒழுங்கீனம் அதிகரிப்பு – கடும் வெப்பத்தால் பாதுகாப்பு குறித்து மீண்டும் கவலை
ஐரோப்பாவில் நிலவி வரும் கடுமையான வெப்ப அலை காரணமாக ஆயிரக்கணக்கானோர் திறந்தவெளி நீச்சல் குளங்களுக்கு (Freibad) படையெடுத்து வரும் நிலையில், அங்கு ஒழுங்கீனமான நடத்தை மற்றும் பாதுகாப்பு மீறல்கள் அதிகரித்து வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
ஜெர்மனியின் பவேரியா மாநிலத்தில் உள்ள சாம் (Cham) நகரில் கடந்த ஞாயிற்றுக்கிழமை இடம்பெற்ற சம்பவம் இதற்கு ஒரு எடுத்துக்காட்டாக அமைந்துள்ளது. உள்ளூர் ஊடகங்களின் தகவலின்படி, சுமார் 10 பேர் கொண்ட குழுவொன்று பொது நீச்சல் குளத்திற்கு வந்திருந்தது. அவர்கள் அதிக சத்தமிட்டு மற்றவர்களுக்கு இடையூறு செய்ததுடன், பணியாளர்கள் மற்றும் அங்கு வந்திருந்த பொதுமக்களிடம் ஆக்ரோஷமாக நடந்து கொண்டதாக கூறப்படுகிறது.
நிலைமையை சமாளிக்க நீச்சல் குள ஊழியர் ஒருவர் அமைதியாக இருக்கவும், மற்றவர்களை மதிக்கவும் அறிவுறுத்தியபோது, அந்தக் குழுவின் நடத்தை மேலும் மோசமடைந்ததாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

மேலும், மற்றவர்கள் நீரில் இருப்பதைப் பொருட்படுத்தாமல் மீண்டும் மீண்டும் உயரமான குதிப்பு மேடையிலிருந்து (Diving Board) அவர்கள் குதித்ததாகவும், இதனால் மற்ற நீச்சல் பயிற்சியாளர்களின் உயிருக்கு ஆபத்து ஏற்பட்டதாகவும் கூறப்படுகிறது.
இத்தகைய பொறுப்பற்ற செயல்கள் எவ்வளவு ஆபத்தானவை என்பதை கடந்த ஆண்டு சுவிட்சர்லாந்தின் நியுஷாட்டல் (Neuchâtel) மாநிலத்தில் உள்ள லா ஷோ-து-ஃபோன் (La Chaux-de-Fonds) நகரில் நடந்த சோகச் சம்பவம் நினைவூட்டுகிறது. அங்கு உள்ள Les Mélèzes நீச்சல் குளத்தில் 10 வயது சிறுவன் ஒருவர் 5 மீட்டர் உயர மேடையிலிருந்து குதித்தபோது, 67 வயதுடைய நீச்சல் வீரர் மீது மோதி விபத்து ஏற்பட்டது. அந்த முதியவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.
சாம் நகரில் நடைபெற்ற சமீபத்திய சம்பவத்தில், நிலைமை கட்டுக்கடங்காததால் நீச்சல் குள நிர்வாகம் ஒருவருக்கு வெளியேறுமாறு உத்தரவிட்டது. ஆனால் அதன்பிறகும் பதற்றம் குறையாமல், அங்கிருந்த சிலர் அந்தக் குழுவுக்கு ஆதரவாக ஊழியர்களிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.
இதையடுத்து சம்பவ இடத்திற்கு விரைந்த பொலிஸார் நிலைமையை கட்டுக்குள் கொண்டு வந்தனர். பின்னர் சம்பந்தப்பட்ட அனைவரும் நீச்சல் குளத்திலிருந்து வெளியேற்றப்பட்டதுடன், அவர்களுக்கு இனிமேல் அந்த நீச்சல் குளத்திற்குள் நுழைய நிரந்தர தடை (Hausverbot) விதிக்கப்பட்டது.
கடுமையான கோடை வெப்பத்தால் நீச்சல் குளங்களுக்கு வரும் மக்களின் எண்ணிக்கை அதிகரித்து வரும் நிலையில், பாதுகாப்பு விதிகளை மதிப்பது, மற்றவர்களின் உயிரையும் நலனையும் கருத்தில் கொண்டு பொறுப்புடன் நடந்து கொள்வது அவசியம் என அதிகாரிகள் மீண்டும் வலியுறுத்தியுள்ளனர்.





