வலேஸ் ஆல்ப்ஸ் பகுதியில் மின்னல் தாக்கி 97 செம்மறியாடுகள் உயிரிழப்பு
வலேஸ் ஆல்ப்ஸ் பகுதியில் மின்னல் தாக்கி 97 செம்மறியாடுகள் உயிரிழப்பு

வலேஸ் ஆல்ப்ஸ் பகுதியில் மின்னல் தாக்கி 97 கருப்பு மூக்கு செம்மறியாடுகள் உயிரிழப்பு
சுவிட்சர்லாந்தின் வலேஸ் (Valais) மாநிலத்தில் உள்ள பின்டால் (Binntal) பள்ளத்தாக்கு பகுதியில் அமைந்துள்ள எக்கர்ஹோர்ன் (Eggerhorn) மலை மேய்ச்சல் நிலத்தில் வெள்ளிக்கிழமை அதிகாலை ஏற்பட்ட இடியுடன் கூடிய மழையின்போது மின்னல் தாக்கி 97 கருப்பு மூக்கு செம்மறியாடுகள் (Schwarznasenschafe) உயிரிழந்துள்ளன. இந்தச் சம்பவம் சுவிட்சர்லாந்தின் கால்நடை வளர்ப்பாளர்களிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
சம்பவத்தில் பாதிக்கப்பட்ட ஆடுகளின் உரிமையாளர்களில் ஒருவரும், வலேஸ் ஆன்லைன் ஊடகமான Pomona வெளியிட்ட தகவலை உறுதிப்படுத்தியுள்ளார். மின்னல் தாக்கி உயிரிழந்த சுமார் 100 ஆடுகளின் உடல்கள் வெள்ளிக்கிழமை முழுவதும் மீட்பு ஹெலிகாப்டர் மூலம் மலைப்பகுதியிலிருந்து அகற்றப்பட்டதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

ஆடு வளர்ப்பாளர் கிலியன் ஷ்னைட்ரிக் (Kilian Schnydrig) கூறுகையில், பெரிய வேட்டையாடும் காட்டு விலங்குகளிடமிருந்து பாதுகாப்பதற்காக அனைத்து ஆடுகளும் ஒரே இடத்தில் இரவு நேரத்தில் அடைக்கப்பட்டிருந்தன. சில ஆண்டுகளுக்கு முன்பு வரை இவ்வாறு ஒரே இடத்தில் இரவு தங்க வைக்க வேண்டிய அவசியம் இருக்கவில்லை என்றும் அவர் தெரிவித்தார். தகவலின்படி, மின்னல் தாக்கிய நேரத்தில் அந்த ஆடுகள் இரவு பாதுகாப்பு வேலிக்குள் (Night Pen) இருந்ததாக கூறப்படுகிறது.
இந்தச் சம்பவம் வலேஸ் மாநிலத்தின் பாரம்பரிய கால்நடை வளர்ப்புத் துறைக்கு மிகப்பெரிய இழப்பாகக் கருதப்படுகிறது. கருப்பு மூக்கு செம்மறியாடு என்பது வெறும் கால்நடை மட்டுமல்ல; அது வலேஸ் மாநிலத்தின் பாரம்பரிய கலாசாரத்தின் ஒரு அடையாளமாகவும் கருதப்படுகிறது. பல தலைமுறைகளாக அன்புடனும் மரபுடனும் வளர்க்கப்படும் இந்த இனத்தை இவ்வாறு ஒரே நேரத்தில் இழந்தது, பாதிக்கப்பட்ட பண்ணையாளர்களை பல ஆண்டுகள் பின்னுக்குத் தள்ளும் என கால்நடை வளர்ப்பாளர்கள் கவலை தெரிவித்துள்ளனர்.
சுவிட்சர்லாந்தில் இதுபோன்ற சம்பவம் இதற்கு முன்பும் பதிவாகியுள்ளது. 2014 ஆம் ஆண்டு வலேஸ் மாநிலத்தின் ரோஸ்வால்ட் (Rosswald) மலைப்பகுதியில் மின்னல் தாக்கியதில் 70 கருப்பு கழுத்து ஆடுகள் (Schwarzhalsziegen) இருந்த கூட்டத்தில் 22 ஆடுகள் உயிரிழந்த சம்பவமும் இடம்பெற்றிருந்தது.





