நள்ளிரவில் சோலோதூர்னில் பரபரப்பு! துப்பாக்கிக் கடையில் கொள்ளை முயற்சி
நள்ளிரவில் சோலோதூர்னில் பரபரப்பு! துப்பாக்கிக் கடையில் கொள்ளை முயற்சி

நள்ளிரவில் சோலோதூர்னில் பரபரப்பு! துப்பாக்கிக் கடையில் கொள்ளை முயற்சி…
சோலோதூர்னில் உள்ள ஒரு துப்பாக்கிக் கடையில் நள்ளிரவில் நடைபெற்ற கொள்ளை முயற்சி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

புதன்கிழமை நள்ளிரவுக்குப் பிறகு, பலர் இணைந்து Goldgasse பகுதியில் உள்ள துப்பாக்கிக் கடையின் ஜன்னலை உடைத்து உள்ளே நுழைய முயன்றதாக காவல்துறை தெரிவித்துள்ளது.
அருகில் வசித்த 19 வயது இளைஞர் ஒருவர், பலத்த சத்தம் கேட்டு வெளியே பார்த்தபோது, சுமார் ஐந்து பேர் கடையின் ஜன்னலை உடைக்க முயற்சிப்பதைக் கண்டதாக கூறியுள்ளார். அவர்கள் பயன்படுத்தியதாகக் கூறப்படும் கருப்பு நிற கார், பிரெஞ்சு பதிவு எண்ணைக் கொண்டிருந்ததாகவும், அவர்கள் பிரெஞ்சு மொழியில் பேசியதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
கொள்ளையர்கள் தப்பிச் செல்லும் தருணத்தில், பணியில் இல்லாத சோலோதூர்ன் காவல்துறை அதிகாரி ஒருவர் அவர்களின் வாகனத்தை நோக்கி துப்பாக்கியால் சுட்டுள்ளார். இருப்பினும், இந்தச் சூட்டில் யாருக்கும் காயம் ஏற்பட்டதாக இதுவரை தகவல் இல்லை.
சம்பவ இடத்திற்கு விரைந்த காவல்துறையினர் தேடுதல் நடத்தியபோதும், சந்தேக நபர்கள் தப்பிச் சென்றுள்ளனர். அவர்கள் என்னென்ன பொருட்களை எடுத்துச் சென்றனர் மற்றும் ஏற்பட்ட சேதத்தின் அளவு குறித்து இன்னும் விசாரணை நடைபெற்று வருகிறது.
இந்தக் கொள்ளை முயற்சி மற்றும் தப்பிச் சென்றவர்களைப் பற்றிய தகவல் தெரிந்தவர்கள் உடனடியாக சோலோதூர்ன் மாகாண காவல்துறையைத் தொடர்புகொள்ளுமாறு அதிகாரிகள் கேட்டுக்கொண்டுள்ளனர்.





