மனித உரிமைகளா? நடுநிலைமையா? சுவிட்சர்லாந்தில் கத்தோலிக்க திருச்சபைக்குள் கடும் மோதல்!
மனித உரிமைகளா? நடுநிலைமையா? சுவிட்சர்லாந்தில் கத்தோலிக்க திருச்சபைக்குள் கடும் மோதல்!

மனித உரிமைகளா? நடுநிலைமையா? சுவிட்சர்லாந்தில் கத்தோலிக்க திருச்சபைக்குள் கடும் மோதல்!
சுவிட்சர்லாந்தில் கத்தோலிக்க திருச்சபைக்குள் தற்போது ஒரு புதிய சர்ச்சை வெடித்துள்ளது!
நடுநிலைமை முன்னெடுப்புக்கு எதிராக கத்தோலிக்கத் திருச்சபையின் சார்பில் வெளியிடப்பட்ட நிலைப்பாடு, தற்போது சில கத்தோலிக்க விசுவாசிகளிடையே கடும் எதிர்ப்பை ஏற்படுத்தியுள்ளது.
இந்த விவகாரத்தின் மையத்தில் இருப்பது “வோக்ஸ் எத்திகா” என்ற அமைப்பு.
கத்தோலிக்கத் திருச்சபையின் பொருளாதார மற்றும் சமூக அறநெறி விவகாரங்களில் குரல் கொடுக்கும் இந்த அமைப்பு, சுவிட்சர்லாந்தின் நடுநிலைமை முன்னெடுப்பை எதிர்த்து தனது ஆறு பக்க மதிப்பீட்டை வெளியிட்டுள்ளது.
அதன் முக்கிய வாதம் என்னவென்றால்…
மனித உரிமைகள் மற்றும் சர்வதேச சட்ட மீறல்களுக்கு எதிராக சுவிட்சர்லாந்து நடவடிக்கை எடுக்க வேண்டிய நிலை ஏற்பட்டால், நடுநிலைமை அதற்கு தடையாக இருக்கக்கூடாது என்பதாகும்.
மேலும், நடுநிலைமை என்பது தனித்த அறநெறி மதிப்பு அல்ல என்றும், அமைதி, மனித உரிமைகள் மற்றும் நீதியான சர்வதேச ஒழுங்கு போன்ற அடிப்படை மதிப்புகளை பாதுகாப்பதற்கான ஒரு கருவி மட்டுமே என்றும் வோக்ஸ் எத்திகா கூறுகிறது.
ஆனால் இதற்கு எதிராக கத்தோலிக்க விசுவாசிகள் சிலர் பகிரங்கக் கடிதம் ஒன்றை வெளியிட்டுள்ளனர்.
“ஒரு அரசியல் தேர்தலில் மக்கள் எப்படி வாக்களிக்க வேண்டும் என்று திருச்சபை உத்தரவிடக்கூடாது” என்பதே அவர்களின் முக்கிய எதிர்ப்பு.
அதிலும் குறிப்பாக, பொருளாதாரத் தடைகள் ஒரு நாட்டின் ஆட்சியாளர்களை மட்டும் பாதிக்காமல், சாதாரண மக்களையும் பாதிக்கக்கூடும் என்று அவர்கள் சுட்டிக்காட்டுகின்றனர்.
அவர்களின் கேள்வி மிகவும் நேரடியானது:
“இத்தகைய கூட்டுத் தண்டனை நடவடிக்கைகளை இயேசு கிறிஸ்து ஆதரிப்பாரா?”
மாறாக, மோதலில் இருக்கும் அனைத்து தரப்பினருடனும் உரையாடுவதற்கும், அமைதியை உருவாக்குவதற்கும் சுவிட்சர்லாந்தின் கடுமையான நடுநிலைமை உதவக்கூடும் என்று அவர்கள் வாதிடுகின்றனர்.
இதில் சுவிஸ் மக்கள் கட்சியான SVP-யின் தேசிய கவுன்சிலர் வ்ரோனி தால்மன்-பியரி உள்ளிட்டோரும் கையெழுத்திட்டுள்ளனர்.

ஆனால் வோக்ஸ் எத்திகா தனது நிலைப்பாட்டை மீண்டும் தெளிவுபடுத்தியுள்ளது.
“விசுவாசிகள் எப்படி வாக்களிக்க வேண்டும் என்று நாங்கள் கட்டளையிடவில்லை. ஆனால் மத மற்றும் அறநெறிக் குரல்கள் சமூக விவாதங்களில் இருந்து விலகி இருக்க வேண்டும் என்ற கருத்தை ஏற்க முடியாது” என்பதே அதன் பதில்.
இதனால் தற்போது கேள்வி ஒன்று தான்:
மத நிறுவனங்கள் அரசியல் மற்றும் சமூக விவகாரங்களில் அறநெறி அடிப்படையில் கருத்து தெரிவிக்கலாமா?
அல்லது…
அவை அரசியல் நிலைப்பாடுகளில் இருந்து முழுமையாக விலகி, அமைதி மற்றும் ஆன்மீகப் பணிகளில் மட்டுமே கவனம் செலுத்த வேண்டுமா?
சுவிட்சர்லாந்தில் இந்த விவகாரம் தற்போது கத்தோலிக்க சமூகத்திற்குள்ளேயே புதிய விவாதத்தை உருவாக்கியுள்ளது.






