டச்சு சுற்றுலாப் பேருந்து விபத்து! சுஷ்–ஜெர்னெஸ் சாலை மூடப்பட்டது
டச்சு சுற்றுலாப் பேருந்து விபத்து! சுஷ்–ஜெர்னெஸ் சாலை மூடப்பட்டது

டச்சு சுற்றுலாப் பேருந்து விபத்து! சுஷ்–ஜெர்னெஸ் சாலை மூடப்பட்டது…
சுவிட்சர்லாந்தின் கிராபுண்டன் மாகாணத்தில் உள்ள சுஷ் மற்றும் ஜெர்னெஸ் இடையே இடம்பெற்ற பயங்கர பேருந்து விபத்தில் பலர் உயிரிழந்துள்ளனர். மேலும் பலர் காயமடைந்துள்ளதாக கிராபுண்டன் மாகாண காவல்துறை தெரிவித்துள்ளது.
டச்சு சுற்றுலாப் பேருந்து ஒன்று, மாலை சுமார் 4:45 மணியளவில் ஜெர்னெஸிலிருந்து சுஷ் நோக்கிப் பயணித்துக் கொண்டிருந்தபோது இந்த விபத்து இடம்பெற்றுள்ளது.
காவல்துறை தெரிவித்த தகவலின்படி, பேருந்து முதலில் தடுப்பு வேலியில் மோதி, பின்னர் சாலையை விட்டு விலகி பக்கவாட்டில் கவிழ்ந்து நின்றுள்ளது.
விபத்து இடம்பெற்றபோது பேருந்தில் பலர் இருந்ததாகத் தெரிவிக்கப்பட்டுள்ள நிலையில், பயணிகளின் சரியான எண்ணிக்கை இதுவரை அதிகாரிகளால் வெளியிடப்படவில்லை.
விபத்தில் பாதிக்கப்பட்டவர்களையும், பேருந்தையும் மீட்கும் பணிகள் சம்பவ இடத்தில் தொடர்ந்து நடைபெற்று வருகின்றன.
இந்த விபத்தில் தொடர்புடைய டச்சு பேருந்து நிறுவனமான Oad, சம்பவம் குறித்து தாங்கள் மிகுந்த அதிர்ச்சியடைந்துள்ளதாகவும், பாதிக்கப்பட்டவர்கள் மற்றும் அவர்களது குடும்பத்தினருக்கு ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவித்துள்ளதாகவும் கூறியுள்ளது.
மேலும், நிலைமை குறித்து தெளிவான தகவல்கள் கிடைத்தவுடன், பாதிக்கப்பட்ட பயணிகளின் உறவினர்களுக்கு தகவல் வழங்கப்பட்டு, தேவையான உதவிகள் செய்யப்படும் என்றும் நிறுவனம் தெரிவித்துள்ளது.

இதனிடையே, விபத்து காரணமாக ஜெர்னெஸ் மற்றும் சுஷ் இடையேயான எங்கடைன் சாலை மூடப்பட்டுள்ளது.
தெற்கு டைரோலுக்குச் செல்லும் ஜூலியர் கணவாய் – ஓஃபன் கணவாய் – முன்ஸ்டர்டால் வழித்தடம் பாதிக்கப்படவில்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது.
விபத்தில் பாதிக்கப்பட்டவர்களின் உறவினர்கள் மற்றும் தூதரகங்களுக்காக உதவி எண் ஒன்றும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாக காவல்துறை தெரிவித்துள்ளது.
சாலை எப்போது மீண்டும் திறக்கப்படும் என்பது குறித்து இதுவரை உறுதியான தகவல் வெளியிடப்படவில்லை.
இந்த துயரச் சம்பவம் தொடர்பான மேலதிக தகவல்கள் அதிகாரிகளிடமிருந்து கிடைக்கும் நிலையில் தொடர்ந்து வெளியாகும்.





