ஐரோப்பிய ஒன்றிய வேலைஇழப்பு சீர்திருத்தம்: சுவிட்சர்லாந்துக்கு ஆண்டுக்கு 1 பில்லியன் பிராங்க் செலவாகுமா?
ஐரோப்பிய ஒன்றிய வேலைஇழப்பு சீர்திருத்தம்: சுவிட்சர்லாந்துக்கு ஆண்டுக்கு 1 பில்லியன் பிராங்க் செலவாகுமா?

ஐரோப்பிய ஒன்றிய வேலைஇழப்பு சீர்திருத்தம்: சுவிட்சர்லாந்துக்கு ஆண்டுக்கு 1 பில்லியன் பிராங்க் செலவாகுமா?
ஐரோப்பிய ஒன்றியம் (EU) முன்வைத்துள்ள புதிய வேலைஇழப்பு நலத்திட்ட சீர்திருத்தம் அமலுக்கு வந்தால், சுவிட்சர்லாந்து ஆண்டுதோறும் சுமார் 1 பில்லியன் சுவிஸ் பிராங்குகள் வரை செலுத்த வேண்டிய நிலை உருவாகலாம் என தகவல்கள் வெளியாகியுள்ளன.
பிரஸ்ஸல்ஸ் (Brussels) நகரில் கடந்த ஏப்ரல் மாத இறுதியில், சுமார் பத்து ஆண்டுகளாக நடைபெற்ற பேச்சுவார்த்தைகளுக்குப் பிறகு இந்த சீர்திருத்த ஒப்பந்தம் எட்டப்பட்டது.
புதிய விதிமுறைகளின் படி, எல்லை தாண்டி வேலை செய்யும் “Frontaliers” எனப்படும் பணியாளர்கள் வேலை இழந்தால், அவர்களுக்கு வழங்கப்படும் வேலைஇழப்பு நிதியின் பொறுப்பு அவர்கள் வசிக்கும் நாட்டிலிருந்து, அவர்கள் பணியாற்றிய நாட்டுக்கு மாற்றப்படும்.
இதுவரை, உதாரணமாக பிரான்சில் வசித்து சுவிட்சர்லாந்தில் வேலை செய்த ஒருவர் வேலை இழந்தால், அவரின் வசிப்புநாடான பிரான்சே வேலைஇழப்பு நிதியை வழங்கி வந்தது. ஆனால் புதிய திட்டத்தின் கீழ் அந்த செலவை சுவிட்சர்லாந்தே ஏற்க வேண்டியிருக்கும்.

பிரான்ஸ் மற்றும் பிற ஐரோப்பிய ஒன்றிய நாடுகள், இந்த புதிய முறையை சுவிட்சர்லாந்தும் ஏற்க வேண்டும் என அழுத்தம் கொடுக்கத் தொடங்கியுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
இதனால் குறிப்பாக ஜெனீவா (Genève), வோ (Vaud) மற்றும் டிசினோ கன்டோன் (Tessin) போன்ற எல்லைப்பகுதி கன்டோன்களில் வேலைவாய்ப்பு சேவைகள் மீது கூடுதல் அழுத்தம் ஏற்படக்கூடும் என அதிகாரிகள் அச்சம் வெளியிட்டுள்ளனர்.
இந்நிலையில், சுவிட்சர்லாந்து கூட்டாட்சி அரசு இதுவரை அதிகாரப்பூர்வ நிலைப்பாட்டை வெளியிடவில்லை. எனினும், ஐரோப்பிய ஒன்றியத்துடனான இருதரப்பு சுதந்திரமான பணியாளர் இயக்க ஒப்பந்தங்களின் ஒரு பகுதியாக இந்த விவகாரத்தில் முடிவு எடுக்க வேண்டியிருக்கும்.
இந்த விவகாரம் தற்போது சுவிட்சர்லாந்தில் வேலைவாய்ப்பு, சமூக நலச்செலவுகள் மற்றும் ஐரோப்பிய ஒன்றிய உறவுகள் தொடர்பாக பரவலான அரசியல் விவாதத்தை ஏற்படுத்தியுள்ளது.
©WRS






