நிட்வால்டன் (Nidwalden) கன்டோனில் துயரம்: தபால் பேருந்துடன் நேருக்கு நேர் மோதி முதியவர் உயிரிழப்பு
நிட்வால்டன் (Nidwalden) கன்டோனில் துயரம்: தபால் பேருந்துடன் நேருக்கு நேர் மோதி முதியவர் உயிரிழப்பு

என்னெட்பூர்கன் (Ennetbürgen) பகுதியில் துயரம்: மின்சார மிதிவண்டி ஓட்டிய 90 வயது முதியவர் உயிரிழப்பு
நிட்வால்டன் (Nidwalden) கன்டோனிலுள்ள என்னெட்பூர்கன் (Ennetbürgen) பகுதியில் மின்சார மிதிவண்டியில் பயணித்துக் கொண்டிருந்த 90 வயது முதியவர் ஒருவர் தபால் பேருந்துடன் நேருக்கு நேர் மோதிய விபத்தில் உயிரிழந்துள்ளார்.
இந்த விபத்து வெள்ளிக்கிழமை காலை இடம்பெற்றதாக நிட்வால்டன் கன்டோனல் காவல் துறை தெரிவித்துள்ளது. ஆரம்ப தகவல்களின் படி, அந்த முதியவர் ஒரு துணைச் சாலையிலிருந்து பிரதான சாலைக்குள் நுழைந்தபோது எதிரே வந்த Autopostale பேருந்துடன் மோதியதாக கூறப்படுகிறது.
அப்பகுதியைச் சேர்ந்த 90 வயது நபர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்ததாக போலீசார் உறுதிப்படுத்தியுள்ளனர். விபத்தில் ஏற்பட்ட கடுமையான காயங்களே உயிரிழப்புக்குக் காரணம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதற்கிடையில், பேருந்தில் பயணம் செய்த ஒருவருக்கு லேசான காயம் ஏற்பட்டதுடன், அவர் அவசர மருத்துவ குழுவினரால் சிகிச்சை பெற்றார்.
உயிரிழந்த முதியவர் மணிக்கு 25 கிலோமீட்டர் வேக வரம்பு கொண்ட மின்சார மிதிவண்டியை பயன்படுத்தியதாக நிட்வால்டன் கன்டோனல் போலீசார் தெரிவித்துள்ளனர்.
விபத்துக்கான சரியான காரணங்களை கண்டறிய நிட்வால்டன் அரசுத் தரப்பு வழக்கறிஞர் அலுவலகத்துடன் இணைந்து விசாரணைகள் நடைபெற்று வருகின்றன.
மூலம்: நிட்வால்டன் கன்டோனல் காவல் துறை





