சுவிட்சர்லாந்தின் உயரமான உம்ப்ரெயில் மலைவழிப் பாதைக்கு 125 ஆண்டுகள் நிறைவு
சுவிட்சர்லாந்தின் உயரமான உம்ப்ரெயில் மலைவழிப் பாதைக்கு 125 ஆண்டுகள் நிறைவு

சுவிட்சர்லாந்தின் உயரமான உம்ப்ரெயில் மலைவழிப் பாதைக்கு 125 ஆண்டுகள் நிறைவு
கிரௌவுண்டன் (Graubünden) கன்டோனில் உள்ள உம்ப்ரெயில் மலைவழிப் பாதை (Umbrail Pass) தனது 125ஆவது ஆண்டு நிறைவை இன்று கொண்டாடுகிறது. கடல்மட்டத்திலிருந்து 2,503 மீட்டர் உயரத்தில் அமைந்துள்ள இது, சுவிட்சர்லாந்தின் உயரமான மலைவழிப் பாதையாக அறியப்படுகிறது.
வால் மொனாஸ்டெரோ (Val Monastero) பகுதியை இத்தாலியின் அல்டா லொம்பார்டியா (Alta Lombardia) பிராந்தியத்துடன் இணைக்கும் இந்த சாலை, சுவிட்சர்லாந்து கூட்டாட்சி அரசும் கிரௌவுண்டன் கன்டோனும் வழங்கிய நிதி உதவியுடன் 1901 ஆம் ஆண்டு கட்டப்பட்டது. சுமார் 14 கிலோமீட்டர் நீளமுடைய இந்த மலைச் சுருள் சாலை, சான்டா மரியா (Santa Maria) பகுதியிலிருந்து வால்டெல்லினா (Valtellina) வழியாக ஸ்டெல்வியோ (Stelvio) மலைப்பாதையுடன் இணைக்கப்பட்டுள்ளது.
முதல் உலகப்போரின் போது இந்த பகுதி கடுமையான மோதல்களின் மையமாக இருந்ததாக சுவிட்சர்லாந்தின் வரலாற்று போக்குவரத்து வழித்தடங்களுக்கான கூட்டாட்சி பதிவுகள் தெரிவிக்கின்றன. அந்நேரத்தில் சுவிஸ் படையினர், ஆஸ்திரிய மற்றும் இத்தாலிய படைகளின் எதிரே பாதுகாப்பு நிலைகளில் இருந்ததாக குறிப்பிடப்பட்டுள்ளது.

இந்த வரலாற்று சுவடுகளை பாதுகாக்கும் நோக்கில் “Verein Stelvio-Umbrail 14/18” என்ற அமைப்பு 2000ஆம் ஆண்டு முதல் செயல்பட்டு வருகிறது. அப்பகுதியில் இன்னும் காணப்படும் போர் தடயங்களை பாதுகாத்து, ஆவணப்படுத்தி, பொதுமக்கள் பார்வைக்கு கொண்டு வருவது அந்த அமைப்பின் முக்கிய பணியாகும்.
இந்த வரலாற்று காலத்தை பதிவு செய்யும் சிறப்பு திரைப்படம் ஜூன் 11ஆம் திகதி வால் மொனாஸ்டெரோவிலுள்ள சான்டா மரியா பகுதியில் திரையிடப்பட உள்ளது.
பல்வேறு நாடுகளையும் கலாசாரங்களையும் இணைக்கும் இந்த முக்கிய மலைவழிப் பாதையின் 125ஆவது ஆண்டு விழா இன்று வால்காவா (Valchava) பகுதியில் உரைகள் மற்றும் நேரடி இசை நிகழ்ச்சிகளுடன் கொண்டாடப்படுகிறது.






