
சுவிஸில் “தமிழர் மையம்” செயலி அறிமுகம்
சுவிட்சர்லாந்தின் சூரிச் மாநிலத்தில் கடந்த ஞாயிற்றுக்கிழமை பிற்பகல், ஈழத் தமிழர் வர்த்தக உலகில் முக்கியமான முன்னேற்றமாக கருதப்படும் “Tamils Point” (தமிழர் மையம்) செயலி, இணையதளம் மற்றும் தமிழ் வர்த்தக நிறுவனங்களை ஒருங்கிணைத்த கையேடு ஆகியவற்றின் அறிமுக விழா சிறப்பாக நடைபெற்றது.
இந்த முயற்சி, Makinan Subramaniam அவர்களின் பத்து ஆண்டுகால தேடல், இலக்கு மற்றும் கடின உழைப்பின் பலனாக உருவாக்கப்பட்டதாக நிகழ்வில் தெரிவிக்கப்பட்டது.
இந்த அறிமுக விழாவில் சுவிட்சர்லாந்தில் இயங்கி வரும் தமிழ் வர்த்தகத் துறையின் பல தலைமுறைகளைச் சேர்ந்த தொழில்முனைவோர்கள், சமூக ஆர்வலர்கள், இன உணர்வாளர்கள் மற்றும் பல்வேறு துறைகளின் நிபுணர்கள் கலந்து கொண்டனர்.
“Tamils Point” செயலியின் முக்கிய நோக்கம், உலகம் முழுவதும் பரவி வாழும் தமிழர் வர்த்தக நிறுவனங்களை ஒரே தளத்தின் கீழ் இணைப்பதாகும். இந்த செயலியை பதிவிறக்கம் செய்வதன் மூலம், பயனர்கள் தமக்கு அருகிலுள்ள உணவகங்கள், சில்லறை வணிக நிலையங்கள் உள்ளிட்ட பல்வேறு தமிழ் வணிக நிறுவனங்களை எளிதில் கண்டறிய முடியும் என தெரிவிக்கப்பட்டது.
மேலும், இந்த தளத்தில் பதிவு செய்யும் நிறுவனங்கள் முழுமையான ஆய்வுக்குப் பின்னரே இணைக்கப்படுவதால், தமிழ் வர்த்தக நிறுவனங்களுக்கு மட்டுமே இடமளிக்கப்படும் என்பது இதன் முக்கிய சிறப்பம்சமாகும். இதன் மூலம் தமிழ் மக்களின் பொருளாதார பரிமாற்றம் தமிழர் சமூகத்துக்குள்ளேயே சுழலச் செய்யும் நோக்கமும் வலியுறுத்தப்பட்டது.

நிகழ்வில் கருத்து பகிர்ந்த அனுபவமிக்க வர்த்தகப் பெருமக்கள், இத்தகைய முயற்சிகள் புலம்பெயர் நாடுகளில் தமிழ் வர்த்தக சமூகத்தை மேலும் வலுப்படுத்தும் என தெரிவித்தனர்.
மேலும், கல்வித் துறையில் வலிமையான சமூகமாக வளர்ந்துவரும் தமிழர்கள், வர்த்தகத் துறையிலும் தமது அடையாளத்தை உறுதியாக உருவாக்கி வருவதாகவும், பொருளாதார பலம் அதிகரிக்கும் போது உலகம் தமிழர்களின் பிரச்சினைகள் மற்றும் தேவைகளை கவனிக்கத் தொடங்கும் என்றும் கருத்துகள் வெளியிடப்பட்டன.
மாறிவரும் உலக சூழலுக்கு ஏற்ப தமிழ் சமூகத்தின் தொழில் மற்றும் வர்த்தக தளங்களை நவீனமயப்படுத்தி, எதிர்காலத்தை நோக்கிய முயற்சிகளுக்கு அனைவரும் ஒத்துழைப்பு வழங்க வேண்டும் என்ற அழைப்புடனும் நிகழ்வு நிறைவடைந்தது. ஒரு ஈழத்தமிழரின் இந்த முயற்சி வெற்றியடைய சுவிஸ்தமிழ் ஊடகத்தின் அங்கமான சுவிஸ்தமிழ் டிவி சார்பிலும் எமது வாழ்த்துக்களை தெரிவித்துக்கொள்ளுகிறோம்.






