எலான் மஸ்க்கின் Starlink திட்டத்திற்கு வலைஸ் (Valais) கிராமத்தில் எதிர்ப்பு
வலைஸ் (Valais) கன்டோனிலுள்ள லோய்க் (Loèche) கிராமத்தில் ஐரோப்பாவின் மிகப்பெரிய Starlink தரைநிலையத்தை அமைக்கும் திட்டத்திற்கு எதிராக இரு உள்ளூர் மருத்துவர்கள் சட்டப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
எலான் மஸ்க்கின் SpaceX நிறுவனத்துக்கு சொந்தமான Starlink திட்டத்தின் கீழ், அந்தப் பகுதியில் சுமார் 40 செயற்கைக்கோள் ஆண்டெனாக்கள் அமைக்கப்படவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனால் மக்கள் குறைவாக ஆய்வு செய்யப்பட்ட மின்காந்த கதிர்வீச்சுகளுக்கு (electromagnetic radiation) உட்பட நேரிடும் அபாயம் இருப்பதாக மருத்துவர்கள் எச்சரித்துள்ளனர்.
அதேவேளை, இந்த நிலையம் பாதுகாப்பு தொடர்பான ஆபத்துகளையும் உருவாக்கக்கூடும் என அவர்கள் கூறுகின்றனர். குறிப்பாக உக்ரைனில் ட்ரோன் தொடர்புகள் உள்ளிட்ட இராணுவ தகவல் பரிமாற்றங்களில் Starlink பயன்படுத்தப்படுவதால், சுவிட்சர்லாந்து எதிர்காலத்தில் தாக்குதல்களுக்கு இலக்காக மாறும் அபாயம் இருப்பதாகவும் அவர்கள் வாதிடுகின்றனர்.

இருப்பினும், சம்பந்தப்பட்ட நகராட்சி SpaceX நிறுவனத்தின் பாதுகாப்பு ஆய்வறிக்கையை அடிப்படையாகக் கொண்டு கட்டுமான அனுமதியை வழங்கியுள்ளது. மேலும், இந்த திட்டம் தொடர்பாக குறிப்பிடத்தக்க தேசிய பாதுகாப்பு பாதிப்பு எதுவும் இல்லை என சுவிட்சர்லாந்து கூட்டாட்சி அரசும் தெரிவித்துள்ளது.
ஆனால் எதிர்ப்பு தெரிவிக்கும் இரு மருத்துவர்களும் இந்த முடிவுக்கு எதிராக கன்டோன் நிர்வாகத்தில் முறையீடு செய்துள்ளனர். தேவையானால் இந்த வழக்கை சுவிட்சர்லாந்தின் கூட்டாட்சி நீதிமன்றம் (Federal Court) வரை கொண்டு செல்லத் தயாராக இருப்பதாகவும் அவர்கள் அறிவித்துள்ளனர்.
இந்த திட்டம் தற்போது தொழில்நுட்ப வளர்ச்சி, பொதுமக்கள் உடல்நலம் மற்றும் தேசிய பாதுகாப்பு குறித்து சுவிட்சர்லாந்தில் பரவலான விவாதத்தை ஏற்படுத்தியுள்ளது.



