சுவிட்சர்லாந்து மாணவர்களிடம் அதிக உடல் எடை குறைந்தாலும் கவலை தொடர்கிறது
சுவிட்சர்லாந்து மாணவர்களிடம் அதிக உடல் எடை குறைந்தாலும் கவலை தொடர்கிறது

சுவிட்சர்லாந்து மாணவர்களிடம் அதிக உடல் எடை குறைந்தாலும் கவலை தொடர்கிறது
சுவிட்சர்லாந்தில் பள்ளி மாணவர்களிடையே அதிக உடல் எடை மற்றும் உடல் பருமன் பிரச்சினை கடந்த இருபது ஆண்டுகளில் குறைந்துள்ளதாக புதிய ஆய்வு ஒன்று தெரிவிக்கிறது. இருப்பினும், இது இன்னும் முக்கியமான பொதுச் சுகாதார சவாலாகவே நீடிக்கிறது என நிபுணர்கள் எச்சரிக்கின்றனர்.
ஆய்வின் படி, 2005 ஆம் ஆண்டில் மாணவர்களில் சுமார் 20 சதவீதம் பேர் அதிக உடல் எடை அல்லது உடல் பருமனால் பாதிக்கப்பட்டிருந்த நிலையில், தற்போது அந்த எண்ணிக்கை 15.5 சதவீதமாக குறைந்துள்ளது. இது ஆய்வு தொடங்கியதிலிருந்து பதிவான மிகக் குறைந்த அளவாகும்.
இருப்பினும், இன்னும் ஆறு மாணவர்களில் ஒருவருக்கு அதிக உடல் எடை பிரச்சினை இருப்பதாக ஆய்வாளர்கள் சுட்டிக்காட்டுகின்றனர்.
இந்த கண்காணிப்பு திட்டம் 2005/06 கல்வியாண்டில் ஆரம்பிக்கப்பட்டது. அப்போது உலக சுகாதார அமைப்பு உலகளவில் “உடல் பருமன் தொற்றுநோய்” நிலை உருவாகிவருவதாக எச்சரித்திருந்தது.

குறிப்பாக பாசல்-ஸ்டாட் கன்டோனில், 1970களின் இறுதி காலத்திலிருந்து 2000களின் தொடக்கம் வரை குழந்தைகளில் உடல் பருமன் சம்பவங்கள் இரட்டிப்பாகியிருந்ததாக ஆய்வு நினைவூட்டுகிறது.
தற்போது இந்த ஆய்வு, சுவிட்சர்லாந்தில் குழந்தைகள் மற்றும் இளைஞர்களிடையே அதிக உடல் எடை தொடர்பாக தொடர்ந்து மேற்கொள்ளப்பட்டு வரும் மிக நீண்டகால தரவு சேகரிப்பாக மாறியுள்ளது.
ஆய்வின் மற்றொரு முக்கிய கண்டுபிடிப்பாக சமூக மற்றும் குடும்ப பின்னணி குறிப்பிடப்பட்டுள்ளது. உயர்ந்த சமூக-பொருளாதார நிலை கொண்ட பகுதிகளில் வாழும் மாணவர்கள் குறைவாக பாதிக்கப்படுகின்றனர். அதேவேளை, பெற்றோருக்கு மேலதிக கல்வி இல்லாத குடும்பங்களில் பிறந்த குழந்தைகளுக்கு அதிக உடல் எடை அபாயம் குறிப்பிடத்தக்க அளவில் அதிகமாக இருப்பதாக கூறப்பட்டுள்ளது.
ஆரோக்கியமான பள்ளி உணவு திட்டங்கள், அதிகப்படியான விளையாட்டு வாய்ப்புகள் மற்றும் நீண்டகால சுகாதார விழிப்புணர்வு நடவடிக்கைகள் இந்த முன்னேற்றத்திற்கு காரணமாக இருக்கலாம் என ஆய்வாளர்கள் கருதுகின்றனர்.
எனவே, ஆரோக்கியமான உடல் எடையை ஊக்குவிக்கும் திட்டங்கள் எதிர்காலத்திலும் தொடரப்பட வேண்டும் என்றும், புதிய தேவைகளுக்கேற்ப மேலும் வலுப்படுத்தப்பட வேண்டும் என்றும் நிபுணர்கள் வலியுறுத்தியுள்ளனர்.





