10 மில்லியன் மக்கள்தொகையா? “அது சாத்தியமே இல்லை” – சுவிஸ் நிபுணர் கருத்து
10 மில்லியன் மக்கள்தொகையா? “அது சாத்தியமே இல்லை” – சுவிஸ் நிபுணர் கருத்து

சுவிட்சர்லாந்தின் மக்கள்தொகையை 10 மில்லியனுக்கு மேல் அதிகரிக்கக்கூடாது எனக்கூறும் பிரேரணை ஒன்று தற்போது நாடு முழுவதும் பெரும் கவனத்தை ஈர்த்துவருவது அனைவரும் அறிந்ததே.
இந்நிலையில், சுவிஸ் மக்கள்தொகை 10 மில்லியனை எட்டவே எட்டாது என்கிறார் துறைசார் நிபுணர் ஒருவர்.
புலம்பெயர்தலுக்கு எதிராக தொடர்ந்து குரல் கொடுத்துவரும் Swiss People’s Party (SVP), “No to 10 Million Switzerland” எனப்படும் பிரேரணையை முன்வைத்துள்ளது.
புலம்பெயர்தலை கட்டுப்படுத்துவதை நோக்கமாகக் கொண்ட இந்த திட்டம், வெளிநாடுகளிலிருந்து அதிகளவில் மக்கள் வருவதன் மூலம் சுவிட்சர்லாந்தின் மக்கள்தொகை வேகமாக அதிகரிக்கக்கூடாது என்பதையே அடிப்படையாகக் கொண்டுள்ளது.
இந்த பிரேரணை தொடர்பான தேசிய வாக்கெடுப்பு ஜூன் மாதம் 14ஆம் திகதி நடைபெற உள்ளது.

10 மில்லியனா? வாய்ப்பே இல்லை
இந்நிலையில், சுவிஸ் மக்கள்தொகை 10 மில்லியனை எட்டும் வாய்ப்பே மிகவும் குறைவு என்கிறார் மக்கள்தொகை நிபுணரான Hendrik Budliger.
அவரது கருத்துப்படி, ஐரோப்பிய நாடுகளில் மக்கள் முதிர்வு வேகமாக அதிகரித்து வரும் நிலையில், திறன்மிக்க இளைஞர் பணியாளர்களை தங்களது நாடுகளிலேயே தக்கவைத்துக்கொள்ள அண்டை நாடுகள் கடுமையாக போட்டியிட்டு வருகின்றன.
இதன் காரணமாக, அண்டை நாடுகளிலிருந்து திறமையான பணியாளர்களை சுவிட்சர்லாந்து எதிர்காலத்தில் எளிதாக பெற்றுக்கொள்ள முடியாது என அவர் எச்சரிக்கிறார்.
அதேவேளை, சுவிட்சர்லாந்தில் பிறப்பு விகிதம் வரலாறு காணாத அளவுக்கு தொடர்ந்து குறைந்து வருவதாகவும் அவர் சுட்டிக்காட்டுகிறார்.
இதனால், இயல்பான மக்கள்தொகை வளர்ச்சி மந்தமாகி, சுவிட்சர்லாந்தின் மக்கள்தொகை 10 மில்லியனை எட்டும் சாத்தியம் மிகவும் குறைவாக இருப்பதாக Hendrik Budliger தெரிவிக்கிறார்.
மேலும், எதிர்காலத்தில் சுவிட்சர்லாந்து எதிர்கொள்ளப்போகும் மிகப்பெரிய சவால் புலம்பெயர்தல் அல்ல, பணியாளர்கள் பற்றாக்குறையாக இருக்கும் எனவும் அவர் கூறுகிறார்.
“ஒரு கட்டத்தில், பணிக்கு ஆட்கள் கிடைப்பதே மிகப்பெரிய பிரச்சினையாக மாறும். அப்போது புலம்பெயர்தல் பிரச்சினையாகவே யாருக்கும் தோன்றாது” என அவர் தெரிவித்துள்ளார்.
இந்த கருத்துக்கள், தற்போது சுவிட்சர்லாந்தில் நடைபெற்று வரும் குடியேற்றம் மற்றும் மக்கள்தொகை தொடர்பான அரசியல் விவாதங்களுக்கு புதிய கோணத்தை உருவாக்கியுள்ளன.





