Swiss News In Tamil

வேட்டையின்போது நண்பரை சுட்டுக்கொன்ற முதியவருக்கு தண்டனை

வேட்டையின்போது நண்பரை சுட்டுக்கொன்ற முதியவருக்கு தண்டனை

வேட்டையின்போது நண்பரை சுட்டுக்கொன்ற முதியவருக்கு தண்டனை

வோ கன்டோனின் Gros-de-Vaud பகுதியில் கடந்த 2024 ஆம் ஆண்டு இடம்பெற்ற வேட்டையாடும் விபத்தில், தன்னுடன் வேட்டைக்குச் சென்ற ஒருவரை தவறுதலாக சுட்டுக்கொன்ற 80 வயது நபருக்கு நீதிமன்றம் தண்டனை விதித்துள்ளது.

குறித்த நபர் கவனக்குறைவால் மரணம் ஏற்படுத்திய குற்றத்தில் குற்றவாளி என அறிவிக்கப்பட்டார். அவருக்கு 10 மாதங்கள் சிறைத்தண்டனை விதிக்கப்பட்டுள்ளதுடன், அந்த தண்டனை நிபந்தனையுடன் ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

சம்பவம் நடைபெற்றபோது, அந்த முதியவர் மேலும் ஆறு பேருடன் காட்டுப்பன்றியை வேட்டையாடும் நடவடிக்கையில் ஈடுபட்டிருந்தார்.

அப்போது புதர்களால் சூழப்பட்ட உயர்ந்த நிலப்பகுதிக்குள் மறைந்திருந்த காட்டுப்பன்றியை வெளியே வரச் செய்வதற்காக அவர் மேட்டின் மீது ஏறி இரண்டு தடவைகள் துப்பாக்கியால் சுட்டுள்ளார்.

ஆனால், குண்டுகளில் ஒன்று தரையில் பதியாமல் கீழே இருந்த வேட்டையாடும் குழுவைச் சேர்ந்த ஒருவரின் தலையில் பட்டு அவர் உயிரிழந்ததாக விசாரணையில் தெரியவந்தது.

n4 4

விசாரணைகளில், அனுபவமிக்க வேட்டைக்காரரான அவர் பல பாதுகாப்பு விதிகளை மீறியிருந்தது கண்டறியப்பட்டுள்ளது.

வோ கன்டோனின் விலங்குகள் பாதுகாப்பு சட்டத்தின்படி, வேட்டையாடுபவர் குறிவைக்கும் விலங்கை தெளிவாக அடையாளம் காண வேண்டும் என்பதுடன், துப்பாக்கிச் சூடு நேரடியாகவோ அல்லது எதிரொலியாகவோ யாரையும் தாக்காத வகையில் உறுதி செய்ய வேண்டும் என சட்டம் குறிப்பிடுகிறது.

மேலும், விலங்குகளை பதுங்கியிடத்திலிருந்து வெளியே வரச் செய்வதற்காக துப்பாக்கியால் சுடுவது தடை செய்யப்பட்டிருக்கிறது. இதை குற்றவாளி நன்கு அறிந்திருந்தும் அவர் விதிமீறலில் ஈடுபட்டதாக அரசுத் தரப்பு தெரிவித்துள்ளது.

அத்துடன், துப்பாக்கியின் குழாய் மற்றும் தரை இடையிலான கோணம் குறைந்தபட்சம் 10 டிகிரி இருக்க வேண்டும் என்ற பாதுகாப்பு விதியும் மீறப்பட்டிருந்ததாக கூறப்படுகிறது. சம்பவத்தின் போது அது 6.3 டிகிரி மட்டுமே இருந்ததாக விசாரணையில் தெரியவந்துள்ளது.

இந்த வழக்கு எளிமைப்படுத்தப்பட்ட நீதிமுறை நடைமுறையின் கீழ் விசாரிக்கப்பட்டது. குற்றவாளியும் உயிரிழந்தவரின் குடும்பத்தினரும் அரசுத் தரப்பு முன்வைத்த குற்றப்பத்திரிகையை ஏற்றுக்கொண்டனர்.

நீதிமன்றத்தில் குற்றவாளி, “இதனை நான் மறுக்க முடியாது” என தெரிவித்தார்.

அவரது வழக்கறிஞர், நான்கு ஆண்டுகளுக்கு விதிக்கப்பட்டிருந்த வேட்டையாடும் தடையை மூன்று ஆண்டுகளாக குறைக்குமாறு கோரிக்கை விடுத்தார். தாம் இனி வேட்டையாடப் போவதில்லை என்றும், ஆயுதங்களையும் ஏற்கனவே ஒப்படைத்துவிட்டதாகவும், ஆனால் பேரனுடன் வேட்டைக்கு செல்வதற்கான அனுமதி வேண்டும் என்றும் அவர் தெரிவித்ததாக கூறப்படுகிறது.

நீதிமன்றம் அந்த கோரிக்கையை ஏற்றுக்கொண்டுள்ளது.

இதனுடன், 2,000 சுவிஸ் பிராங்குகள் அபராதமும் விதிக்கப்பட்டுள்ளது. மேலும், நீதிமன்ற செலவுகள் மற்றும் உயிரிழந்தவரின் குடும்பத்துக்கு சுமார் 75,000 சுவிஸ் பிராங்குகள் இழப்பீடும் வழங்க உத்தரவிடப்பட்டுள்ளது.

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button