சுவிஸ் காப்பீட்டு இணைப்பு: வேலைவாய்ப்பு இழப்பு எண்ணிக்கை அதிகரிக்கும் அபாயம் சுவிட்சர்லாந்தின் முக்கிய காப்பீட்டு நிறுவனங்களான Helvetia மற்றும் Baloise ஆகியவற்றின் இணைப்பு (merger) நாட்டில் எதிர்பார்த்ததை விட அதிக வேலைவாய்ப்பு இழப்பை ஏற்படுத்தக்கூடும் என தகவல்கள் வெளியாகியுள்ளன. முதலில் வெளியிடப்பட்ட திட்டங்களின்படி, இந்த இணைப்பின் விளைவாக சுமார் 1,400 முதல் 1,800 பணியிடங்கள் குறைக்கப்படும் என்று கூறப்பட்டிருந்தது. ஆனால் தற்போது வெளியாகியுள்ள புதிய மதிப்பீட்டின்படி, இந்த எண்ணிக்கை 2,300 வரை உயரக்கூடும் என்று தெரியவந்துள்ளது. இது சுவிட்சர்லாந்தின் காப்பீட்டு துறையில் பணியாற்றும் பலருக்கும் கவலைக்குரிய நிலையை உருவாக்கியுள்ளது. இந்த இணைப்பின் முக்கிய நோக்கம் நிறுவனங்களின் செலவுகளை குறைத்து, சந்தை போட்டியில் வலுப்பெறுவது என கூறப்படுகிறது. இருப்பினும், இதன் நேரடி தாக்கம் பணியாளர்களின் வேலைவாய்ப்பில் எதிரொலிக்கிறது. குறிப்பாக நிர்வாகம், ஆதரவு சேவைகள் மற்றும் ஒரே மாதிரியான பணிகள் உள்ள பிரிவுகளில் அதிகப்படியான பணியிடங்கள் நீக்கப்பட வாய்ப்புள்ளதாக வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. இந்த வேலைவாய்ப்பு குறைப்பின் சரியான எண்ணிக்கையை நிறுவனம் வரும் ஏப்ரல் மாத நடுப்பகுதியில் அதிகாரப்பூர்வமாக வெளியிடும் என எதிர்பார்க்கப்படுகிறது. அதுவரை பணியாளர்கள் மற்றும் தொழிற்சங்கங்கள் நிலைமையை நெருக்கமாக கவனித்து வருகின்றனர். சுவிட்சர்லாந்தில் சமீப காலமாக பல துறைகளில் நிறுவன இணைப்புகள் அதிகரித்து வருகின்றன. அதனால் செலவுகளை கட்டுப்படுத்தும் முயற்சிகள் முன்னெடுக்கப்பட்டாலும், வேலைவாய்ப்பு பாதுகாப்பு குறித்து கேள்விகள் எழுந்துவருவது குறிப்பிடத்தக்கது. KeystoneSDA