தலைப்பு: சுவிஸ் ரயில்வேயில் முன்பதிவு இருக்கை சேவை விரிவாக்கம் சுவிட்சர்லாந்தின் தேசிய ரயில்வே நிறுவனமான சுவிஸ் ഫെடரல் ரயில்வேஸ் (SBB) தனது இருக்கை முன்பதிவு சேவையை மேலும் விரிவுபடுத்தியுள்ளது. 2025 ஆம் ஆண்டின் இறுதியில் சூரிச் – லுகானோ மற்றும் பாசல் – லுகானோ வழித்தடங்களில் மட்டும் அறிமுகப்படுத்தப்பட்ட இந்த சேவை, தற்போது பெரும்பாலான நீண்ட தூர (long-distance) ரயில் சேவைகளில் நடைமுறைக்கு கொண்டு வரப்பட்டுள்ளது. இந்த புதிய மாற்றத்தின் மூலம், பயணிகள் 5 சுவிஸ் பிராங்க் கட்டணத்தில் முன்கூட்டியே இருக்கையை முன்பதிவு செய்ய முடியும். குறிப்பாக அதிக நெரிசல் காணப்படும் நேரங்களில் பயணம் செய்யும் பயணிகளுக்கு இது ஒரு பெரிய நிவாரணமாக பார்க்கப்படுகிறது. இந்த சேவையில் Intercity FV Dosto, IC2000, ICN உள்ளிட்ட ரயில்கள் மற்றும் IV, Astoro ஒருங்கிணைந்த வண்டிகளும் அடங்குகின்றன. இதன் மூலம் ஜெனீவா (Geneva), லௌசான் (Lausanne), பெர்ன் (Bern), சென்ட்கேலன் (St. Gallen), குர் (Chur) போன்ற முக்கிய நகரங்களுக்கு பயணம் செய்யும் பயணிகளும் இந்த வசதியை பயன்படுத்திக் கொள்ளலாம். சுவிட்சர்லாந்தில் ரயில் பயணம் மிகவும் பிரபலமானது. குறிப்பாக தினசரி வேலைக்குச் செல்லும் பயணிகள் மற்றும் சுற்றுலா பயணிகள் அதிகமாக பயன்படுத்துவதால், நெரிசல் பிரச்சினைகள் சில நேரங்களில் ஏற்படுகின்றன. இந்த நிலையில், இருக்கை முன்பதிவு சேவையை விரிவுபடுத்தியுள்ள SBB, பயண அனுபவத்தை மேலும் சௌகரியமாக மாற்றும் முயற்சியாக இதை அறிவித்துள்ளது. எதிர்காலத்தில் பயணிகள் தேவைக்கு ஏற்ப இந்த சேவையில் மேலும் மேம்பாடுகள் செய்யப்படலாம் எனவும், டிஜிட்டல் முன்பதிவு முறைகள் அதிகப்படுத்தப்படும் எனவும் எதிர்பார்க்கப்படுகிறது.