அவசர சிகிச்சைக்கு நேரடி வருகைக்கு கூடுதல் கட்டணம்: சுவிட்சில் புதிய சட்டம் சுவிட்சர்லாந்தில் சுகாதார சேவைகளின் மீதான அழுத்தத்தை குறைக்கும் நோக்கில், மருத்துவர் பரிந்துரையின்றி நேரடியாக அவசர சிகிச்சைப் பிரிவுக்கு செல்லும் நோயாளிகளிடம் கூடுதல் கட்டணம் வசூலிக்கும் புதிய மசோதா Swiss Parliament National Council கீழவையில் நிறைவேற்றப்பட்டுள்ளது. இந்த புதிய விதியின் படி, அவசர சிகிச்சைப் பிரிவுக்கு நேரடியாக செல்லும் நோயாளிகள் 50 சுவிஸ் ஃப்ராங்குகள் கூடுதல் கட்டணமாக செலுத்த வேண்டியுள்ளது. இருப்பினும், குழந்தைகள் மற்றும் கர்ப்பிணி பெண்களுக்கு இந்த விதியிலிருந்து விலக்கு வழங்கப்பட்டுள்ளது. சுவிட்சர்லாந்தில் அண்மைக் காலங்களில் அவசர சிகிச்சைப் பிரிவுகளில் நோயாளிகளின் எண்ணிக்கை அதிகரித்து வருவதால், உண்மையான அவசர நிலைகளுக்கு முன்னுரிமை வழங்கும் நோக்கில் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டதாக ஆதரவாளர்கள் விளக்குகின்றனர். சிறிய உடல்நல பிரச்சினைகளுக்காகவும் பலர் நேரடியாக அவசர பிரிவுகளை நாடுவதால், மருத்துவ அமைப்பில் தேவையற்ற சுமை ஏற்படுகிறது என்பதும் அவர்களின் வாதமாகும். ஆனால் இந்த மசோதாவுக்கு எதிராக பல்வேறு தரப்பினரிடமிருந்து கடும் விமர்சனங்கள் எழுந்துள்ளன. பக்கவாதம், விழுந்து காயமடைதல் போன்ற திடீர் உடல்நல பிரச்சினைகளில் சிக்கியவர்களுக்கு இது ஒரு தண்டனை போன்று அமையும் என விமர்சகர்கள் கூறுகின்றனர். அவசர நிலை என்ன, சாதாரண நிலை என்ன என்பதை பொதுமக்கள் உடனடியாக தீர்மானிக்க முடியாது என்பதும் அவர்கள் முன்வைக்கும் முக்கிய கவலைகளில் ஒன்றாகும். இந்த மசோதா கீழவையில் வெறும் ஐந்து வாக்குகள் வித்தியாசத்தில் மட்டுமே நிறைவேற்றப்பட்டிருப்பது, இந்த விவகாரம் எவ்வளவு சர்ச்சைக்குரியதாக உள்ளதைக் காட்டுகிறது. அடுத்த கட்டமாக, இது Swiss Council of States மேலவையில் விவாதிக்கப்பட உள்ளது. அந்த விவாதத்தின் முடிவே இந்த புதிய கட்டண விதி நடைமுறைக்கு வரும் தருணத்தை தீர்மானிக்கும். © KeystoneSDA