மத்திய கிழக்கு பதற்றம்: சூரிச்–டெல்லி கூடுதல் தினசரி விமான சேவையை SWISS அறிவிப்பு மத்திய கிழக்கில் நீடித்து வரும் போர் சூழ்நிலையின் தாக்கம் உலக விமானப் போக்குவரத்திலும் தெளிவாகக் காணப்படும் நிலையில், Swiss International Air Lines (SWISS) நிறுவனம் சுவிட்சர்லாந்து மற்றும் இந்தியா இடையிலான தனது விமான சேவையை விரிவுபடுத்தியுள்ளது. 2026 ஏப்ரல் 1 முதல் மே 31 வரை, தற்போது இயங்கிவரும் Zurich (சூரிச்) – Delhi (டெல்லி) வழக்கமான தினசரி சேவைக்கு மேலாக, மேலும் ஒரு கூடுதல் தினசரி நேரடி விமான சேவையை SWISS அறிமுகப்படுத்தியுள்ளது. இந்த புதிய சேவை Airbus A330 விமானத்தின் மூலம் இயக்கப்படும் என்று நிறுவனம் தெரிவித்துள்ளது. மத்திய கிழக்கு பகுதியாகச் செல்லும் விமானப் பாதைகள் பாதிக்கப்பட்டதால், பல்வேறு விமான நிறுவனங்களில் முன்பதிவு செய்திருந்த பயணிகள் தங்கள் பயணங்களை மேற்கொள்ள முடியாத சூழ்நிலை உருவாகியுள்ளது. இதனால், நேரடி விமான சேவைகளுக்கான தேவையில் கணிசமான அதிகரிப்பு ஏற்பட்டுள்ளதாக SWISS குறிப்பிடுகிறது. இந்த தேவையை கருத்தில் கொண்டு, அடுத்த இரண்டு மாதங்களுக்கு பயணிகளுக்கு கூடுதல் வசதியாக இந்த புதிய சேவை அறிமுகப்படுத்தப்பட்டுள்ளதாகவும், டிக்கெட்டுகள் ஏற்கனவே முன்பதிவுக்கு திறந்துள்ளதாகவும் நிறுவனம் தெரிவித்துள்ளது. மேலும், மத்திய கிழக்கின் நிலைமையை தொடர்ந்து கண்காணித்து, தேவைக்கேற்ப விமானங்களின் எண்ணிக்கையும் திறன்களும் மாற்றப்படுகின்றன என்று SWISS தெரிவித்துள்ளது. பயணிகளின் தேவை மட்டுமின்றி, விமான நிலைய ஸ்லாட் அனுமதிகள், விமான போக்குவரத்து உரிமைகள் மற்றும் கிடைக்கும் விமானங்கள் போன்ற செயல்பாட்டு காரணிகளும் இந்த முடிவுகளில் முக்கிய பங்காற்றுகின்றன.