Swiss News In Tamil

மிக்ரோஸ் பெயரில் புதிய SMS மோசடி – வாடிக்கையாளர்களை ஏமாற்றும் குற்றவாளிகள் மீது எச்சரிக்கை

மிக்ரோஸ் பெயரில் புதிய SMS மோசடி – வாடிக்கையாளர்களை ஏமாற்றும் குற்றவாளிகள் மீது எச்சரிக்கை

சுவிட்சர்லாந்தின் மிக்ரோஸ் (Migros) நிறுவனத்தின் பெயரில் புதிய வகையான SMS மோசடி பரவி வருகிறது. “உங்கள் க்யூம்லுஸ் (Cumulus) புள்ளிகள் விரைவில் காலாவதியாகவிருக்கின்றன, இப்போது பயன்படுத்தி சிறப்பு சலுகைகள் பெறுங்கள்” என்ற பெயரில் வரும் இந்தச் செய்தி, பலரையும் போலி இணையதளத்துக்கு அழைத்துச் செல்கிறது.

இந்த SMS-களை குற்றவாளிகள் மிக்ரோஸ் நிறுவனத்தின் பெயரைப் பயன்படுத்தி அனுப்புகின்றனர். செய்திகள் நம்பகமானதாகத் தோன்றும் வகையில் அனுப்புநர் எண்கள் மாற்றியமைக்கப்பட்டு (spoofed) இருப்பதால், பலர் உண்மையான தகவலாக நம்பி இணைப்பைத் திறக்கின்றனர்.

ஆனால், அந்த இணைப்பு மிக்ரோஸின் அதிகாரப்பூர்வ இணையதளத்திற்கு அல்ல. அதற்கு பதிலாக, போலியாக வடிவமைக்கப்பட்ட ஒரு வலைத்தளத்திற்கே வழிநடத்துகிறது. அங்கு “உங்கள் க்யூம்லுஸ் புள்ளிகளால் ஹெட்ஃபோன்கள், ஸ்மார்ட்வாட்ச்கள், லவுட்ஸ்பீக்கர்கள் போன்ற பரிசுகள் பெறலாம்” எனக் கூறி, முதலில் பயனர்களிடம் மின்னஞ்சல் முகவரியை கேட்கின்றனர். பின்னர், பொருட்களை அனுப்ப வேண்டும் என்ற பெயரில், முகவரி மற்றும் கிரெடிட் கார்டு விவரங்களைப் பதிவு செய்யுமாறு கோரப்படுகிறது.

N2A

உண்மையில், அந்த தகவல்கள் நேரடியாக குற்றவாளிகளிடம் சென்று விடுகின்றன. இதன் மூலம், அவர்கள் பாதிக்கப்பட்டவர்களின் கிரெடிட் கார்டிலிருந்து அனுமதியின்றி பெரிய தொகைகளைப் பறிக்கும் சம்பவங்களும் பதிவு செய்யப்பட்டுள்ளன.

சுவிஸ் இணைய குற்றப்பிரிவு போலீசார் (Cybercrimepolice.ch) பொதுமக்களுக்கு எச்சரிக்கை விடுத்துள்ளனர். சந்தேகத்துக்கிடமான SMS வந்தால், அதை மின்னஞ்சல் மூலமாக அந்த இணைய குற்றப்பிரிவிற்கு அனுப்பி புகார் செய்யுமாறு கேட்டுக் கொண்டுள்ளனர்.

இத்தகைய செய்திகளை புறக்கணித்து உடனடியாக நீக்க வேண்டும். SMS, மின்னஞ்சல் அல்லது சமூக ஊடகங்கள் வழியாக வரும் எந்த இணைப்பையும் சோதிக்காமல் திறக்கக் கூடாது. முக்கியமாக, நிதி அல்லது தனிப்பட்ட தகவல்களை வழங்குவதற்கு முன் அதன் நம்பகத்தன்மையை உறுதி செய்துகொள்ள வேண்டும்.

இவர்களால் ஏமாற்றப்பட்டதாக நினைத்தால், உடனடியாக உங்கள் வங்கி அல்லது கிரெடிட் கார்டு நிறுவனத்துடன் தொடர்புகொண்டு கார்டுகளை முடக்கவும். பின்னர், மாநில காவல்துறை நிலையத்தில் புகார் அளிக்கவும் என்று அதிகாரிகள் வலியுறுத்தியுள்ளனர்.

சுவிட்சர்லாந்தில் இத்தகைய இணைய மோசடிகள் அதிகரித்து வரும் நிலையில், பொதுமக்கள் எச்சரிக்கையுடன் இருக்க வேண்டியது அவசியம் என போலீசார் எச்சரிக்கின்றனர்.

 

Related Articles

Back to top button