ஆர்காவை அதிரவைத்த மயக்கமருந்து வழக்கு! குற்றம் சாட்டப்பட்டவரின் காவல் நீட்டிப்பு
ஆர்காவை அதிரவைத்த மயக்கமருந்து வழக்கு! குற்றம் சாட்டப்பட்டவரின் காவல் நீட்டிப்பு

ஆர்காவை அதிரவைத்த மயக்கமருந்து வழக்கு! குற்றம் சாட்டப்பட்டவரின் காவல் நீட்டிப்பு…
சுவிட்சர்லாந்தின் ஆர்காவ் மாகாணத்தை அதிர்ச்சிக்குள்ளாக்கியுள்ள கடுமையான பாலியல் குற்றச்சாட்டு தொடர்பான புதிய தகவல்கள் வெளியாகியுள்ளன!
பெண்களுக்கு மயக்கமருந்து அல்லது போதைப்பொருள் கொடுத்து பாலியல் ரீதியாக துன்புறுத்தியதாகவும், சம்பவங்களை ரகசியமாக காணொளிகளில் பதிவு செய்ததாகவும் குற்றம் சாட்டப்பட்டுள்ள ஒருவரின் விசாரணைக்கு முந்தைய தடுப்புக் காவலை நீட்டித்து ஆர்காவ் உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
இந்த நபர் கடந்த 2025ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் கைது செய்யப்பட்டதிலிருந்து தடுப்புக் காவலில் உள்ளார்.
விசாரணையில், பல பெண்கள் தொடர்பான கடுமையான பாலியல் குற்றச்சாட்டுகள் முன்வைக்கப்பட்டுள்ளன. மேலும், பாதிக்கப்பட்டவர்களுடன் இடம்பெற்றதாகக் கூறப்படும் பாலியல் செயல்கள் புகைப்படங்கள் மற்றும் காணொளிகளாக பதிவு செய்யப்பட்டதாகவும், அவற்றில் சில இணையத்திலும் பதிவேற்றப்பட்டதாகவும் அதிகாரிகள் சந்தேகிக்கின்றனர்.
கைப்பற்றப்பட்டுள்ள டிஜிட்டல் சாதனங்கள் மற்றும் காணொளிகள் அனைத்தும் இன்னும் முழுமையாக ஆய்வு செய்யப்படவில்லை.
மேலும், இதுவரை அடையாளம் காணப்படாத சில வன்முறைக் காட்சிகளும் இருப்பதாக நீதிமன்றத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
குற்றம் சாட்டப்பட்டவர் விடுவிக்கப்பட்டால், இதுவரை அதிகாரிகளுக்குத் தெரியாத பாதிக்கப்பட்டவர்களை தொடர்புகொண்டு விசாரணையில் தலையிட முயற்சிக்கக்கூடும் என நீதிமன்றம் கருதியுள்ளது.

மேலும், விசாரணையின் போது ஒரு USB சாதனம் அழிக்கப்பட்டதாகவும் குற்றச்சாட்டு முன்வைக்கப்பட்டுள்ளது.
அத்துடன், மீண்டும் இதுபோன்ற குற்றங்களில் ஈடுபடும் அபாயமும் இருப்பதாக நீதிமன்றம் குறிப்பிட்டுள்ளது.
இதன் அடிப்படையில் தடுப்புக் காவலை நீட்டித்த நீதிமன்றம், குற்றம் சாட்டப்பட்டவரின் மேல்முறையீட்டை நிராகரித்துள்ளது.
எனினும், இந்தத் தீர்ப்பு இன்னும் இறுதியானதல்ல. இதற்கு எதிராக கூட்டாட்சி உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யும் வாய்ப்பு உள்ளது.
விசாரணை தொடர்ந்து நடைபெற்று வருகிறது.






