டீப்ஃபேக் தடுக்கும் புதிய தொழில்நுட்பம் சூரிச்சில் உருவாக்கம் செயற்கை நுண்ணறிவு வளர்ச்சியால் உலகளவில் பெரும் சவாலாக மாறியுள்ள போலி வீடியோக்கள் மற்றும் புகைப்படங்களை கட்டுப்படுத்தும் நோக்கில், சுவிட்சர்லாந்தின் ETH Zurich ஆய்வாளர்கள் புதுமையான தொழில்நுட்பத்தை அறிமுகப்படுத்தியுள்ளனர். இணையத்தில் தவறான தகவல்கள் வேகமாக பரவுகின்ற இக்காலத்தில், இந்த முயற்சி தகவல் நம்பகத்தன்மையை உறுதி செய்யும் முக்கிய முன்னேற்றமாகக் கருதப்படுகிறது. இந்த தொழில்நுட்பத்தின் மையமாக ஒரு சிறிய சென்சார் சிப் அமைந்துள்ளது. இது கேமரா அல்லது ஒலிப்பதிவு சாதனங்களில் பொருத்தப்பட்டால், படம் அல்லது ஒலி பதிவு செய்யப்படும் அதே தருணத்தில் தானாகவே ஒரு டிஜிட்டல் கையொப்பத்தை உருவாக்குகிறது. இதன் மூலம் அந்த தரவு உருவான தருணமே பாதுகாப்பாக பதிவாகிறது. இந்த டிஜிட்டல் கையொப்பம் குறியாக்கவியல் முறையில் உருவாக்கப்படுவதால், பின்னர் அந்தப் படம் அல்லது வீடியோ மாற்றப்பட்டதா என்பதை எளிதாக கண்டறிய முடியும். மேலும் அது எந்த சாதனத்தில், எந்த நேரத்தில் பதிவு செய்யப்பட்டது என்பதையும் துல்லியமாக சரிபார்க்க முடியும். இதனால் போலி தகவல்கள் பரவுவதற்கான வாய்ப்பு குறிப்பிடத்தக்க வகையில் குறையும். இந்த பாதுகாப்பு முறையை மீற முயற்சிப்பது மிகவும் கடினமானதாக இருக்கும் என ஆய்வாளர்கள் கூறுகின்றனர். ஒரு வீடியோவை மாற்றுவதற்காக சிப்பையே உடைத்தோ அல்லது சேதப்படுத்தியோ ஆக வேண்டும் என்பதால், இது தொழில்நுட்ப ரீதியாகவும் பொருளாதார ரீதியாகவும் கடினமான செயல் ஆகும். இதனால் டீப்ஃபேக் உள்ளடக்கங்களை பெருமளவில் உருவாக்குவது சாத்தியமற்றதாக மாறும் என இந்த திட்டத்தின் இணை உருவாக்குநரான Fernando Cardes தெரிவித்துள்ளார். இந்த திட்டத்தின் முன்மாதிரி ஏற்கனவே வெற்றிகரமாக உருவாக்கப்பட்டுள்ளதுடன், காப்புரிமைக்காகவும் விண்ணப்பிக்கப்பட்டுள்ளது. தற்போது கேமரா தயாரிப்பு நிறுவனங்கள் இந்த சிப்பை தங்கள் சாதனங்களில் எளிதாக இணைக்கக்கூடிய வழிகளை ஆய்வாளர்கள் ஆராய்ந்து வருகின்றனர். எதிர்காலத்தில் ஸ்மார்ட்போன்கள் மற்றும் தொழில்முறை கேமராக்களில் இந்த தொழில்நுட்பம் பரவலாக பயன்படுத்தப்பட்டால், இணையத்தில் பகிரப்படும் தகவல்களின் உண்மைத்தன்மையை உறுதிப்படுத்துவது மிகவும் எளிதாகும் என நிபுணர்கள் நம்பிக்கை வெளியிட்டுள்ளனர்.