வாலெய்ஸில் பயங்கர தீ விபத்து… மறுசுழற்சி ஆலை முழுவதும் புகைமூட்டம்!
வாலெய்ஸில் பயங்கர தீ விபத்து... மறுசுழற்சி ஆலை முழுவதும் புகைமூட்டம்!

வாலெய்ஸில் பயங்கர தீ விபத்து… மறுசுழற்சி ஆலை முழுவதும் புகைமூட்டம்!
வாலெய்ஸ் மாகாணத்தின் உவ்ரியர் நகரில் உள்ள ஒரு மறுசுழற்சி ஆலையில் ஏற்பட்ட கடுமையான தீ விபத்து அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
வாலைஸ் மாகாண காவல்துறையின் தகவல்படி, பிற்பகல் சுமார் 3 மணி 20 நிமிடத்திற்கு தீ விபத்து குறித்து அவசர அழைப்பு கிடைத்ததைத் தொடர்ந்து, தீயணைப்பு வீரர்கள் மற்றும் மீட்புப் படையினர் பெரும் அளவில் சம்பவ இடத்திற்கு விரைந்தனர்.
தீ பரவிய ஆலை பல்வேறு வகையான கழிவுகளை மறுசுழற்சி செய்யும் தொழிற்சாலையாகும். தீயை முழுமையாக கட்டுப்படுத்தும் பணியில் தீயணைப்பு வீரர்கள் தொடர்ந்து ஈடுபட்டு வருகின்றனர்.

இதற்கிடையில், தீயணைப்புப் பணிகள் சிரமமின்றி நடைபெற பொதுமக்கள் அந்தப் பகுதியைத் தவிர்க்குமாறு காவல்துறை அறிவுறுத்தியுள்ளது.
மேலும், அலர்ட் ஸ்விஸ் எச்சரிக்கை அமைப்பும் அருகிலுள்ள குடியிருப்பாளர்கள் அனைவரும் ஜன்னல்கள் மற்றும் கதவுகளை மூடி வைக்கவும், காற்றோட்ட அமைப்புகள் மற்றும் குளிரூட்டிகளை தற்காலிகமாக அணைக்கவும் பரிந்துரைத்துள்ளது. இதன் மூலம் புகை மற்றும் மாசுபட்ட காற்று வீடுகளுக்குள் நுழைவதைத் தவிர்க்க முடியும் என்று அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
மாலை 6 மணி 15 நிமிட நிலவரப்படி, தீ பெரும்பாலும் கட்டுக்குள் கொண்டு வரப்பட்டிருந்தாலும், அது இன்னும் முழுமையாக அணைக்கப்படவில்லை.
இந்த விபத்தில் யாரேனும் காயமடைந்துள்ளனரா என்பது குறித்து இதுவரை அதிகாரப்பூர்வ தகவல் வெளியாகவில்லை. தீ விபத்திற்கான காரணத்தையும் காவல்துறை தொடர்ந்து விசாரித்து வருகிறது.





