சூரிச் ஏரியில் சினிமா பாணி கொள்ளை… தீவு உணவகத்தின் பாதுகாப்புப் பெட்டகமே மாயம்!
சூரிச் ஏரியில் சினிமா பாணி கொள்ளை... தீவு உணவகத்தின் பாதுகாப்புப் பெட்டகமே மாயம்!

சூரிச் ஏரியில் சினிமா பாணி கொள்ளை… தீவு உணவகத்தின் பாதுகாப்புப் பெட்டகமே மாயம்!
சூரிச் ஏரியில் உள்ள உஃபெனாவ் Ufenau தீவில் அமைந்துள்ள பிரபல உணவகத்தில் நடைபெற்ற துணிச்சலான கொள்ளைச் சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
உணவக உரிமையாளர் மைக்கேல் பெக்லார்ட் கூறுகையில், திங்கட்கிழமை இரவு படகில் வந்த மர்ம நபர்கள் உணவகத்திற்குள் நுழைந்து, பாதுகாப்புப் பெட்டகத்தை முழுவதுமாக தூக்கிச் சென்றதுடன், உள்ளே இருந்த பல பொருட்களையும் சேதப்படுத்தியுள்ளனர்.
இதற்கு முன்பும் சிறிய அளவில் திருட்டுகள் நடந்திருந்தாலும், இந்த முறை பாதுகாப்புப் பெட்டகத்தையே எடுத்துச் சென்றிருப்பது மிகப்பெரிய அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.

மேலும், “சந்தேகத்திற்கிடமான சரக்குகளுடன் சென்ற படகை யாராவது பார்த்திருந்தால் உடனடியாக தகவல் தெரிவிக்குங்கள். குற்றவாளிகளைப் பிடிக்க உதவும் தகவல் வழங்குபவர்களுக்கு ஏராளமான இலவச மீன் மற்றும் சிப்ஸ் வழங்கப்படும்” என்று நகைச்சுவை கலந்த அறிவிப்பையும் அவர் வெளியிட்டுள்ளார்.
அவரது கூற்றுப்படி, பாதுகாப்புப் பெட்டகத்தில் பெரிய அளவில் பணம் கூட இல்லை. ஆனால் அதற்காக திருடர்கள் ஏற்படுத்திய சேதம்தான் மிகவும் வேதனை அளிப்பதாக அவர் கூறியுள்ளார்.
இதற்கிடையில், ஷ்விட்ஸ் மாகாண காவல்துறை சம்பவத்தை உறுதிப்படுத்தியுள்ளது. போலீசார் சம்பவ இடத்திற்குச் சென்று ஆதாரங்களை சேகரித்ததுடன், திருடப்பட்ட பொருட்கள் மற்றும் சொத்து சேதம் தொடர்பாக தீவிர விசாரணையைத் தொடங்கியுள்ளனர்.
இந்த துணிச்சலான கொள்ளையில் ஈடுபட்டவர்கள் யார்? பாதுகாப்புப் பெட்டகம் மீட்கப்படுமா? என்ற கேள்விகளுக்கு பதில் காண போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.





