சுவிஸில் Airbnb வீடுகள் குற்றவாளிகளின் ரகசிய பதுங்குமிடமா? அதிர்ச்சி தகவல்!
சுவிஸில் Airbnb வீடுகள் குற்றவாளிகளின் ரகசிய பதுங்குமிடமா? அதிர்ச்சி தகவல்!

சுவிஸில் Airbnb போன்ற சேவைகள், குற்றவாளிகளின் பதுங்குமிடங்களாக பயன்படுத்தப்படுவதாக வெளியாகியுள்ள தகவல் அரசியல் மற்றும் பாதுகாப்பு வட்டாரங்களில் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது.
மேற்கு சுவிட்சர்லாந்தில் முதியவர்களை குறிவைத்து மோசடி செய்ததாக சந்தேகிக்கப்படும் இளம் பிரெஞ்சு தம்பதியினர், தங்களது குற்றச் செயல்பாடுகளின் போது வாட் மாகாணத்தில் உள்ள Airbnb வீட்டில் தங்கியிருந்தது விசாரணையில் தெரியவந்துள்ளது.
காவல்துறை தகவலின்படி, அவர்கள் வங்கி அதிகாரிகளாக தொலைபேசியில் நடித்து, நகைகள் மற்றும் பணத்தை பாதுகாப்பிற்காக ஒப்படைக்குமாறு முதியவர்களை ஏமாற்றியுள்ளனர். பின்னர் காவல்துறை சீருடை அணிந்த நபர் அந்த பொருட்களை பெற்றுச் சென்றதாக கூறப்படுகிறது.

காவல்துறையினர் தெரிவிப்பதாவது, ஹோட்டல்களை விட Airbnb போன்ற தனியார் தங்குமிடங்களில் குற்றவாளிகளை கண்டறிவது கடினமாக இருப்பதால், அவர்கள் இந்த வசதிகளை திட்டமிட்டு பயன்படுத்துகின்றனர்.
சூரிச், பெர்ன், வாட் மற்றும் செயின்ட் கேலன் உள்ளிட்ட பல மாகாண காவல்துறைகள், மோசடி, திருட்டு, போதைப்பொருள் குற்றங்கள், விபச்சாரம் மற்றும் மனிதக் கடத்தல் போன்ற சட்டவிரோத செயல்களில் ஈடுபட்டவர்கள் குறுகிய கால வாடகை வீடுகளை பயன்படுத்திய சம்பவங்கள் இருப்பதை உறுதிப்படுத்தியுள்ளன.
இந்த விவகாரம் தற்போது அரசியல் மட்டத்திலும் கவனத்தை ஈர்த்துள்ளது. ஜெனீவாவைச் சேர்ந்த தேசிய கவுன்சிலர் மௌரோ போஜியா, தற்போதைய கண்காணிப்பு முறைகளில் பாதுகாப்பு குறைபாடுகள் இருப்பதாக எச்சரித்துள்ளார். Airbnb போன்ற தளங்களுக்கான கட்டுப்பாடுகளை வலுப்படுத்த வேண்டும் என்றும் அவர் கோரிக்கை விடுத்துள்ளார்.
ஆனால் கூட்டாட்சி மன்றம், தற்போதைய விதிமுறைகள் போதுமானவை எனக் கூறி புதிய கட்டுப்பாடுகளின் அவசியத்தை நிராகரித்துள்ளது.
இதற்கிடையில், விருந்தினர் பதிவு முறையை டிஜிட்டல் மயமாக்கும் பணிகள் ஏற்கனவே முன்னெடுக்கப்பட்டு வருவதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
சுவிட்சர்லாந்தில் Airbnb மற்றும் இதுபோன்ற ஆன்லைன் தங்குமிடங்கள் குற்றச்செயல்களுக்கு பயன்படுத்தப்படுவது எவ்வளவு பரவலாக உள்ளது என்பதை கண்டறிய அதிகாரிகள் மற்றும் அரசியல்வாதிகள் தற்போது கூடுதல் ஆய்வுகளை வலியுறுத்தி வருகின்றனர்





