Local Swiss News

வேக வெறிக்கு முற்றுப்புள்ளி! கார் பறிமுதல்… ஓட்டுநர் உரிமமும் ரத்து!

6a 3

வேக வெறிக்கு முற்றுப்புள்ளி! கார் பறிமுதல்… ஓட்டுநர் உரிமமும் ரத்து!

சமூக ஊடகங்களில் வெளியான காணொளிகளை ஆதாரமாகக் கொண்டு, தொடர்ச்சியாக அதிவேகமாக வாகனம் ஓட்டிய ஓட்டுநர் ஒருவரை பெர்ன் மாகாண காவல்துறை கைது செய்து கடுமையான நடவடிக்கை எடுத்துள்ளது.

இந்த ஆண்டு பிப்ரவரி முதல் மார்ச் மாதம் வரை சீலாந்து பிராந்தியத்தில் மட்டும் பத்து முறை அதிவேகமாக வாகனம் ஓட்டியதாக குறித்த நபர் ஒப்புக்கொண்டுள்ளதாக காவல்துறை தெரிவித்துள்ளது.

பொதுமக்கள் பகிர்ந்த சமூக ஊடக வீடியோக்களை ஆய்வு செய்த காவல்துறை, விரிவான விசாரணைக்குப் பிறகு ஏகர்டனில் உள்ள அவரது வீட்டில் வைத்து சந்தேகநபரை கைது செய்தது.

வீடியோ பகுப்பாய்வும் தொழில்நுட்ப நிபுணர்களின் அறிக்கைகளும் அவரது ஆபத்தான வேக ஓட்டத்தை உறுதிப்படுத்தியுள்ளன.

6a 3

விசாரணையில், 120 கிலோமீட்டர் வேக வரம்பு உள்ள நெடுஞ்சாலையில் மணிக்கு 202 கிலோமீட்டர், 80 கிலோமீட்டர் பகுதியில் 227 கிலோமீட்டர், 60 கிலோமீட்டர் பகுதியில் 197 கிலோமீட்டர், 50 கிலோமீட்டர் பகுதியில் 141 கிலோமீட்டர் வரை அதிவேகமாக பயணித்தது தெரியவந்துள்ளது.

இவ்வாறு பல இடங்களில் தொடர்ந்து வேக வரம்புகளை மீறி பொதுமக்களின் உயிருக்கு ஆபத்தை ஏற்படுத்தியதாக காவல்துறை குற்றம் சாட்டியுள்ளது.

சம்பவத்தில் பயன்படுத்தப்பட்டதாக சந்தேகிக்கப்படும் கார் பறிமுதல் செய்யப்பட்டுள்ளதுடன், குறித்த நபரின் ஓட்டுநர் உரிமமும் உடனடியாக கைப்பற்றப்பட்டுள்ளது. இந்த வழக்கில் மேலதிக சட்ட நடவடிக்கைகள் தொடர்ந்து முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *