ஜெர்மனியில் மாயமான சிறுவன் ஜெனீவா ஏரிக்கரையில் கண்டுபிடிப்பு!
ஜெர்மனியில் மாயமான சிறுவன் ஜெனீவா ஏரிக்கரையில் கண்டுபிடிப்பு!

ஜெர்மனியில் வசித்த மூன்று வாரங்களாகக் காணாமல் போயிருந்த 15 வயது ஜெர்மன் சிறுவன் ஒருவர் சுவிட்சர்லாந்தில் பாதுகாப்பாகக் கண்டுபிடிக்கப்பட்டுள்ள சம்பவம் அவரது குடும்பத்தினருக்கு பெரும் நிம்மதியை ஏற்படுத்தியுள்ளது.
ஜெர்மனியின் கெஹ்ல் நகரைச் சேர்ந்த சைமன் ஆர். என்ற 15 வயது சிறுவன், கடந்த மே மாத நடுப்பகுதியில் தனது வீட்டிலிருந்து காணாமல் போனதாக அறிவிக்கப்பட்டிருந்தது.
இதையடுத்து, காவல்துறையினர் ஹெலிகாப்டர்கள், தேடுதல் நாய்கள் மற்றும் பல்வேறு அவசர சேவைப் பிரிவுகளின் உதவியுடன் தீவிர தேடுதல் நடவடிக்கைகளை முன்னெடுத்தனர்.
இந்நிலையில், சுமார் மூன்று வாரங்களுக்குப் பிறகு, அந்தச் சிறுவன் சுவிட்சர்லாந்தின் வாட் மாகாணத்தில் உள்ள ரோச் நகராட்சிப் பகுதியில், ஜெனீவா ஏரிக்கு அருகில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளார்.
காவல்துறையினர் அவரை அடையாளம் கண்டு சோதனை செய்த பின்னர், அவர் பாதுகாப்பாகவும் நலமாகவும் இருப்பது உறுதி செய்யப்பட்டது.

இதையடுத்து, சுவிஸ் காவல்துறையினர் உடனடியாக அவரது பெற்றோருடன் தொடர்புகொண்டு இந்த மகிழ்ச்சியான தகவலை பகிர்ந்துள்ளனர்.
குறிப்பாக, அவர் காணாமல் போன வீட்டிலிருந்து நேர்க்கோட்டில் சுமார் 255 கிலோமீட்டர் தொலைவில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளார்.
விசாரணையின் போது, தாம் ஸ்பெயினுக்குச் சென்று கொண்டிருந்ததாக அந்தச் சிறுவன் தெரிவித்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
இருப்பினும், அவர் எவ்வாறு அந்தப் பயணத்தை மேற்கொண்டார், ஏன் வீட்டை விட்டு வெளியேறினார் என்பது உள்ளிட்ட பல கேள்விகளுக்கு இன்னும் பதில் கிடைக்கவில்லை.
இந்தச் சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகள் தற்போது தொடர்ந்து நடைபெற்று வருகின்றன.





