Local Swiss News

பெர்னில் 300-க்கும் மேற்பட்ட பிரதிநிதிகள்… உக்ரேனுக்கு ஆதரவாக வரலாற்று மாநாடு

பெர்னில் 300-க்கும் மேற்பட்ட பிரதிநிதிகள்... உக்ரேனுக்கு ஆதரவாக வரலாற்று மாநாடு

பெர்னில், உக்ரேனின் எதிர்காலம், சர்வதேச ஒத்துழைப்பு மற்றும் போருக்குப் பிந்தைய மறுகட்டமைப்பு குறித்து உலக நாடுகளின் கவனத்தை ஈர்த்த முக்கிய நிகழ்வாக, உலகளாவிய உக்ரேனிய உச்சிமாநாடு வெற்றிகரமாக நிறைவடைந்துள்ளது.

சுவிட்சர்லாந்தில் முதன்முறையாக நடைபெற்ற இந்த மூன்று நாள் மாநாட்டில், உலகின் 50 நாடுகளைச் சேர்ந்த 300-க்கும் மேற்பட்ட உக்ரேனிய சமூகப் பிரதிநிதிகள் பங்கேற்றனர்.

உக்ரேனிய அரசாங்கத்தின் உயர்மட்ட அதிகாரிகள், சர்வதேச அமைப்புகள் மற்றும் சமூகத் தலைவர்களும் இந்த நிகழ்வில் கலந்து கொண்டனர்.

இந்த மாநாட்டின் முக்கிய நோக்கம், ரஷ்யாவின் ஆக்கிரமிப்புப் போருக்கு மத்தியில் உக்ரேனின் சுதந்திரம், இறையாண்மை மற்றும் நீண்டகால மறுகட்டமைப்புக்கு உலகளாவிய ஆதரவை வலுப்படுத்துவதாகும்.

உக்ரேனின் துணை வெளியுறவு அமைச்சர் மரியானா பெட்சா உரையாற்றுகையில், “உக்ரேனின் எதிர்காலம் அதன் எல்லைகளுக்குள் மட்டுமல்ல, உலகின் எந்தப் பகுதியில் உக்ரேனியர்கள் வாழ்கிறார்களோ அங்கும் உருவாகிறது” என்று தெரிவித்தார்.

a08 7

அதேபோல், உலக உக்ரேனிய காங்கிரஸின் தலைவர் பால் க்ரோட், சர்வதேச ஆதரவை திரட்டுவதிலும், உலகின் கவனத்தை உக்ரேனின் நிலைமை மீது தொடர்ந்து வைத்திருப்பதிலும் புலம்பெயர் உக்ரேனிய சமூகத்தின் பங்கு மிக முக்கியமானது என்று வலியுறுத்தினார்.

மாநாட்டில் பாதுகாப்பு, மறுகட்டமைப்பு, இளைஞர் மேம்பாடு, கலாச்சார இராஜதந்திரம் மற்றும் உலகளாவிய உக்ரேனியர்களின் எதிர்கால பங்கு போன்ற பல முக்கிய விடயங்கள் விவாதிக்கப்பட்டன.

சமூகக் கொள்கைக்கான உக்ரேனிய துணை அமைச்சர் இலோனா ஹவ்ரோன்ஸ்கா, போரால் இடம்பெயர்ந்த மில்லியன் கணக்கான மக்கள் தாயகத்திற்குத் திரும்புவதற்கு பாதுகாப்பே முதல் நிபந்தனை என்று தெரிவித்தார்.

இதனிடையே, சுவிட்சர்லாந்து மற்றும் லீக்டன்ஸ்டைனுக்கான உக்ரைன் தூதர் இரினா வெனெடிக்டோவா, சர்வதேச தடைகள், முடக்கப்பட்ட சொத்துக்களின் பயன்பாடு மற்றும் போர்க்குற்ற விசாரணைகள் உள்ளிட்ட நடவடிக்கைகளில் உலக நாடுகள் ஒன்றிணைந்து செயல்பட வேண்டிய அவசியத்தை வலியுறுத்தினார்.

இந்த மாநாடு, உக்ரேனுக்கு ஆதரவாக உலக நாடுகள் மற்றும் புலம்பெயர் சமூகங்கள் தொடர்ந்து இணைந்து செயல்படுகின்றன என்ற வலுவான செய்தியை மீண்டும் உலகிற்கு எடுத்துக்காட்டியுள்ளது.

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button