400 ரயில்களை சேவையிலிருந்து நீக்கத் தயாராகும் SBB
400 ரயில்களை சேவையிலிருந்து நீக்கத் தயாராகும் SBB
ஆஸ்பெஸ்டஸ் பாதிப்பு கொண்ட சுமார் 400 ரயில்களை நீக்கத் தயாராகும் SBB
சுவிட்சர்லாந்து கூட்டாட்சி ரயில்வே நிறுவனம் SBB, ஆஸ்பெஸ்டஸ் (Asbestos)அதாவது “நச்சு நார் பொருள்” மற்றும் பிற ஆபத்தான பொருட்கள் உள்ளதாக கண்டறியப்பட்ட சுமார் 400 ரயில்களை சேவையிலிருந்து நீக்கத் திட்டமிட்டு வருகிறது.
SBB வெளியிட்ட தகவலின்படி, இந்த பாதிப்பு உள்ள ரயில்களில் சரக்கு வண்டிகள், ரயில் கட்டமைப்பு பராமரிப்பு வாகனங்கள் மற்றும் பயணிகள் ரயில்களும் அடங்குகின்றன.
எனினும், இந்த ரயில்கள் உடனடியாக சேவையிலிருந்து அகற்றப்படமாட்டாது. அவை 2030கள் வரையிலும் சேவையில் தொடரும் என SBB தெரிவித்துள்ளது.
பயணிகளுக்கு உடனடி ஆபத்து எதுவும் இல்லை என்றும், ஆஸ்பெஸ்டஸ் பொருட்கள் பொதுமக்கள் அணுக முடியாத மூடப்பட்ட பகுதிகளில் பாதுகாப்பாக இருப்பதாகவும் நிறுவனம் விளக்கியுள்ளது.

இந்த ரயில்களை பாதுகாப்பாக அகற்றும் பணிக்காக சுமார் 2.25 மில்லியன் சுவிஸ் பிராங்குகள் செலவாகும் என மதிப்பிடப்பட்டுள்ளது. இதற்காக சிறப்பு நிபுணத்துவம் கொண்ட நிறுவனம் ஒன்று காற்றழுத்தம் கட்டுப்படுத்தப்பட்ட மூடப்பட்ட அரங்குக்குள் பணிகளை மேற்கொள்ளும். இதன் மூலம் ஆஸ்பெஸ்டஸ் நார்த்துகள்கள் வெளியேறுவதைத் தடுக்க முடியும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஆஸ்பெஸ்டஸ் என்பது மனித உடல்நலத்திற்கு ஆபத்தான பொருளாக கருதப்படுகிறது. குறிப்பாக சுவாச நோய்கள் மற்றும் புற்றுநோய்களுக்கு காரணமாக இருக்கக்கூடியதால், சுவிட்சர்லாந்தில் 1990ஆம் ஆண்டு முதல் இந்தப் பொருள் தடைசெய்யப்பட்டது.
இந்த நடவடிக்கை தற்போது சுவிட்சர்லாந்தில் பழைய போக்குவரத்து கட்டமைப்புகளின் பாதுகாப்பு மற்றும் சுற்றுச்சூழல் பாதுகாப்பு குறித்து புதிய கவனத்தை ஏற்படுத்தியுள்ளது.
WRS






