கிளாரஸில் கார்களில் திருட முயன்ற நபர் போலீசாரால் கைது திங்கள்கிழமை மாலை, கிளாரஸ் கன்டோன் போலீசார் சந்தேகத்திற்கிடமான திருடனைக் கைது செய்தனர். பல கார்களை உடைக்க முயன்றமைக்காக அவர் கைது செய்யப்பட்டதாக கிளாரஸ்n கன்டோனல் போலீசார் தெரிவித்தனர். கிளாரஸ் மாகாணத்தில் வசிக்காத 33 வயதுடைய ஒருவர், திங்கள்கிழமை இரவு சுமார் 8:30 மணியளவில் லிந்தலில் நிறுத்தியிருந்த ஒரு காரை திறக்க விரும்பினார். திடீரென அவ்விடத்தில் வந்த வாகன உரிமையாளர் ஆச்சரியமடைந்து அவரது நடத்தை குறித்து கேட்டபோது, அவர் ஒரு பச்சை சைக்கிளில் தெற்கு நோக்கி தப்பிச் சென்றுள்ளார். அதன் பின்னர் போலீசாருக்கு தகவல் அளிக்கப்பட்டு அப்பகுதியில் பாரிய தேடுதல் வேட்டையில் ஈடுபட்டிருந்தனர். எனினும் முதலில் சம்பவம் இடம்பெற்ற லிந்தல் பகுதியில் சந்தேக நபரை கண்டுபிடிக்க முடியவில்லை. பின்னர் அந்த நபர் பெட்ச்சுவாண்டனுக்குச் சென்றார். அங்கு இரவு 10:30 மணியளவில் நிறுத்தப்பட்டிருந்த காரை மீண்டும் திறக்க முயன்றுள்ளார். இதனை கவனித்த ஒருவர் கிளாரஸ் கன்டோனல் போலீசாருக்கு தகவல் அளித்துள்ளார். போலீசார் மேற்கொண்ட தேடுதலின் மூலம் குற்றவாளியை கைது செய்ய முடிந்தது. 33 வயதான அவர் ஏற்கனவே இதே போன்ற குற்றங்களுக்காக மற்ற மண்டலங்களில் தேடப்பட்டுவந்த குற்றவாளி என்பது தெரியவந்துள்ளது. குற்றவாளி பயன்படுத்திய பச்சை நிற சைக்கிள் இன்னும் அடையாளம் காணப்படவில்லை என போலீசார் தெரிவிக்கின்றனர். இது குறித்த தகவல்களை கிளாரஸ் கன்டோனல் காவல்துறைக்கு தெரிவிக்க வேண்டும் எனவும் போலீசார் கேட்டுக்கொண்டுள்ளனர். (ஜோ)