சுவிஸ் பிரபல சாக்லேட் கம்பனியின்; 12 டன் எடையுடைய சாக்லேட் சரக்கு மர்மமான முறையில் மாயம் சுவிஸ் நாட்டின் வாட் கன்டோன் வேவே (Vevey) நகரத்தை தலைமையிடமாகக் கொண்ட Nestlé நிறுவனம் வெளியிட்ட தகவலின்படி, கடந்த வாரம் ஐரோப்பாவில் சுமார் 12 டன் எடையுடைய கிட்காட் சாக்லேட் சரக்கு மர்மமாக திருடப்பட்ட சம்பவம் இடம்பெற்றுள்ளது. இந்த சரக்கு, இத்தாலியின் மத்திய பகுதியிலிருந்து பயணம் தொடங்கி, ஐரோப்பா முழுவதும் விநியோகிக்கப்பட வேண்டியதாக இருந்தது. சுமார் 4 இலட்சத்திற்கும் அதிகமான கிட்காட் சாக்லேட் பார்கள் அடங்கிய இந்த சரக்கு, 1250 முதல் 1350 கிலோமீட்டர் தூரம் கடந்து போலந்து நாட்டை சென்றடைய திட்டமிடப்பட்டிருந்தது. ஆனால், பயணத்தின் இடைப்பட்ட கட்டத்தில் சரக்கை ஏற்றிச் சென்ற வாகனத்துடன் சேர்ந்து முழுமையாக காணாமல் போயுள்ளது. தற்போது வரை அதன் இருப்பிடம் குறித்து எந்தத் தகவலும் கிடைக்கவில்லை. இந்த சம்பவம் குறித்து உள்ளூர் அதிகாரிகளும், விநியோகச் சங்கிலி தொடர்புடைய நிறுவனங்களும் இணைந்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர் என்று நிறுவனம் தெரிவித்துள்ளது. “குற்றவாளிகள் நல்ல ருசியைத் தேர்ந்தெடுத்துள்ளனர் என்று சொல்லலாம்; இருப்பினும், பொருட்கள் திருடப்படுவது இன்றைக்கு சிறியதோ பெரியதோ அனைத்து நிறுவனங்களுக்கும் அதிகரித்து வரும் ஒரு பெரிய சிக்கலாக உள்ளது” என்று நிறுவனத்தின் பேச்சாளர் சற்று நகைச்சுவையுடன் குறிப்பிட்டுள்ளார். ஐரோப்பாவில் சமீப காலங்களில் சரக்கு கடத்தல் மற்றும் விநியோகச் சங்கிலி பாதுகாப்பு தொடர்பான சவால்கள் அதிகரித்து வருவதாக வணிக வட்டாரங்கள் கூறுகின்றன. இந்த சம்பவமும் அந்தப் பிரச்சினையின் தீவிரத்தை மீண்டும் வெளிப்படுத்துவதாக பார்க்கப்படுகிறது. © KeystoneSDA