வோ கன்டோனில் குடும்பத்தினரை கத்தியால் தாக்கிய சம்பவம் – ஒருவர் உயிரிழப்பு
வோ கன்டோனில் குடும்பத்தினரை கத்தியால் தாக்கிய சம்பவம் – ஒருவர் உயிரிழப்பு

வோ கன்டோனில் குடும்பத்தினரை கத்தியால் தாக்கிய சம்பவம் – ஒருவர் உயிரிழப்பு
வோ கன்டோனில் உள்ள ஃபோக்ஸ் (Faoug) பகுதியில் குடும்ப உறுப்பினர்கள்மீது நடத்தப்பட்ட கத்திக்குத்துத் தாக்குதலில் கடுமையாக காயமடைந்தவர்களில் ஒருவர் உயிரிழந்துள்ளார். இந்த சம்பவம் சுவிட்சர்லாந்தில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
கடந்த மே 12 ஆம் தேதி செவ்வாய்க்கிழமை இரவு சுமார் 10.55 மணியளவில், ஒரு இளைஞர் தனது பெற்றோரின் வீட்டிற்கு வந்து குடும்ப உறுப்பினர்களை கத்தியால் தாக்கியதாக வோ கன்டோனல் போலீசாரின் அவசர கட்டுப்பாட்டு மையத்திற்கு தகவல் கிடைத்தது.
ஆரம்பக்கட்ட விசாரணைகளின்படி, தாக்குதல் நடத்தியதாக சந்தேகிக்கப்படும் நபர் தனது குடும்பத்தைச் சேர்ந்த மூவரை கத்தியால் குத்தியுள்ளார். இதில் இருவர் மிகக் கடுமையாக காயமடைந்திருந்தனர். காயமடைந்த அனைவரும் உடனடியாக மீட்கப்பட்டு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டனர்.

ஆனால் தீவிர சிகிச்சையில் இருந்த ஒருவரின் நிலை பின்னர் மோசமடைந்ததால், அவர் மருத்துவமனையில் உயிரிழந்ததாக அதிகாரிகள் உறுதிப்படுத்தியுள்ளனர். மற்ற இரண்டு குடும்ப உறுப்பினர்களும் இன்னும் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்கள். இருப்பினும் அவர்களின் உயிருக்கு தற்போது ஆபத்து இல்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது.
தாக்குதலுக்குப் பின்னர் சந்தேகநபர் அங்கிருந்து தப்பிச் செல்ல முயன்றுள்ளார். அப்போது அயலவரின் வாகனத்தை பறிக்க முயன்றதாகவும், ஆனால் அந்த முயற்சி தோல்வியடைந்ததால் அவர் தப்பிச் சென்றதாகவும் கூறப்படுகிறது.
இதையடுத்து வோ கன்டோனல் போலீசார் விரிவான தேடுதல் நடவடிக்கையை ஆரம்பித்தனர். பின்னர் மே 13 ஆம் தேதி புதன்கிழமை காலை, ஜெனீவா (Genève) பகுதியில் போக்குவரத்து போலீசாரும் ஜெனீவா ஜெண்டர்மரியும் இணைந்து சந்தேகநபரை கைது செய்தனர். பொதுமகளொருவர் வழங்கிய தகவலின் அடிப்படையில் இந்த கைது இடம்பெற்றதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
கைது செய்யப்பட்டவர் 25 வயதுடைய பிரெஞ்சு நாட்டவர் என அடையாளம் காணப்பட்டுள்ளார். அவருக்கு உளவியல் தொடர்பான பிரச்சினைகள் இருந்திருக்கலாம் என தற்போது விசாரணையாளர்கள் சந்தேகிக்கின்றனர்.
இந்த கொடூர தாக்குதலுக்கான துல்லியமான காரணமும் பின்னணியும் குறித்து வோ கன்டோனின் பாதுகாப்பு விசாரணைப் பிரிவு அதிகாரிகள் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த விசாரணை Nord vaudois பிராந்திய அரசுத் தரப்பு வழக்கறிஞர் அலுவலகத்தின் மேற்பார்வையில் நடைபெற்று வருகிறது.© Kapo VD





