சுவிஸ் ரயில் நிலையத்தில் நபர் மீது அம்பு எய்தி தாக்குதல் – மர்ம நபர் கைது சுவிட்சர்லாந்தின் Bern கன்டோனில் அமைந்துள்ள Lyss ரயில் நிலையத்தில், அம்பு எய்தி (Crossbow) ஒருவரை இலக்கு வைத்து தாக்குதல் நடத்தப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. திங்கள்கிழமை அதிகாலை சுமார் 5 மணி அளவில், ரயில் நிலையத்தில் இருந்த ஒருவரை நோக்கி அடையாளம் தெரியாத நபர் பல அம்புகளை எய்தியதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. சம்பவம் குறித்து தகவல் கிடைத்ததும் அவசர மீட்புப் படையினர் உடனடியாக இடத்துக்கு சென்று நடவடிக்கை மேற்கொண்டனர். தாக்குதலுக்கு உள்ளான நபரை மருத்துவ ரீதியாக பரிசோதித்தபோது, அவர் அதிர்ஷ்டவசமாக எவ்வித காயமும் இன்றி உயிர் தப்பியிருப்பது உறுதிப்படுத்தப்பட்டது. இருப்பினும் முன்னெச்சரிக்கை காரணமாக மேலதிக பரிசோதனைகளுக்காக ஆம்புலன்ஸ் மூலம் மருத்துவமனைக்கு அனுப்பப்பட்டார். இந்தச் சம்பவத்தைத் தொடர்ந்து Kantonspolizei Bern விரைந்து செயல்பட்டு, குற்றச்சாட்டுக்குட்பட்ட சந்தேக நபரை கைது செய்துள்ளது. அவர் தற்போது போலீஸ் காவலில் வைக்கப்பட்டுள்ளார். முதற்கட்ட விசாரணைகளில், தாக்குதலுக்கு உள்ளான நபரும், தாக்குதல் நடத்திய நபரும் ஒருவருக்கொருவர் முன்பாக அறிமுகம் இல்லாதவர்கள் என்பது தெரியவந்துள்ளது. இதனால், இந்த தாக்குதல் ஏன் நடைபெற்றது என்பது குறித்து மேலும் குழப்பம் நிலவுகிறது. சம்பவத்திற்கான துல்லியமான காரணங்கள் மற்றும் பின்னணி குறித்து பெர்ன் கன்டோனல் காவல் துறை தீவிர விசாரணை மேற்கொண்டு வருகிறது. பொதுமக்கள் அதிகம் கூடும் இடங்களில் இத்தகைய தாக்குதல்கள் நடைபெறுவது பாதுகாப்பு தொடர்பான கேள்விகளை மீண்டும் எழுப்பியுள்ளது.